அனல்மின் நிலையம் அமைப்பதற்காக கைப்பற்றப்பட்ட விவசாய நிலங்களை மீளவும் தம்மிடம் ஒப்படைக்குமாறு சம்பூர் கிராம மக்களால் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் நகரத்திலிருந்து 6.4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சம்பூர் கிராமமானது, கடந்த 2006ம் ஆண்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்த நிலைமை காரணமாக அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, அப் பகுதியில் வாழ்ந்த மக்கள் சொத்துக்களை இழந்து அகதிகளாக இடம்பெயர்ந்திருந்தனர்.
இந்நிலையில், 2013களில் அனல் மின்நிலையம் அமைப்பதற்காக 2,795 ஏக்கர் விவசாய நிலங்களை இலங்கை அரசு கைப்பற்றியிருந்தது. இந்த காணிகளை மீளவும் மக்களுக்கு வழங்க வேண்டும் என சம்பூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2013ம் ஆண்டு சம்பூர் கிராமத்திற்கு மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் விவசாயம் மற்றும் கடல்நீர் மீன்பிடி தொழில்களை ஜீவனோபாயமாக மேற்கொள்ளும் சமூகத்தினராவர்.
இந்த கிராமத்தில் வாழும் 950 குடும்பங்களின் விவசாய நிலங்களில் யுத்த நடவடிக்கைகளால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், 2013ஆம் ஆண்டில் அனல் மின்நிலையம் அமைப்பதற்காக குறித்த கிராமத்தில் 2,795 ஏக்கர் விவசாய நிலங்களை இலங்கை அரசு மற்றும் மின்சார வாரியம் கைப்பற்றியதுடன், 2016ஆம் ஆண்டில் மேல் நீதிமன்றம் அனல் மின்நிலைய திட்டத்தை நிராகரித்த பின்னரும், சம்பூர் மக்களுடைய நிலங்கள் மக்களுக்கு திருப்பி வழங்கப்படவில்லை என தெரிவித்திருந்தனர்.
மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறித்த பகுதியில் கடற்படைதளம் அமைக்கப்பட்டதால், மக்கள் சோளம், கச்சான், உழுந்து, பயறு மற்றும் வெங்காயம் போன்ற பயிர் செய்கைகளை மேற்கொண்டு வந்த 180 ஏக்கர் நிலங்களை இழந்துள்ளதுடன், இங்கு வாழும் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பேரழிவாகியுள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆகவே, இந்த நிலங்கள் மீள மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் சம்பூர் மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் உயர்த்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.