இராணுவத்தில் பணியாற்றி அங்கவீனமடைந்த அனுராதபுரம் நெகம்பஹாவைச் சேர்ந்த இராணுவச்சிப்பாய் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் அனுராதபுரத்தில் நேற்று (26) பிற்பகல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கல்நேவ விவசாயக் கிராமத்தில் வசிக்கும் டி.என். சரத் திஸாநாயக்க இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இராணுவத்தில் பணிபுரியும் போது வெடிகுண்டு வெடித்ததில் கையை இழந்த அவர், எந்த இழப்பீடும், ஓய்வூதியமும் இன்றி இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டதால், தனது இரண்டு குழந்தைகளுக்கும் ஆதரவளிக்க முடியாத அவலநிலையில் உள்ளதாக குறிப்பிட்டு, சேனநாயக்க சுற்றுவட்டத்துக்கு அருகில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சரத் திஸாநாயக்க, யுத்தத்தின் போது 15 ஆண்டுகளுக்கு முன் வெடிகுண்டு தாக்கி கையை இழந்த நிலையில், மருத்துவ பரிசோதனையின்றி சேவையில் இருந்து நீக்கப்பட்டதாகவும், தற்போதுள்ள அரசாங்கம், இராணுவத்துக்கு எவ்வளவோ அறிவித்தும் தனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.