ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கட்டமைப்புக்குள் கடும் சிக்கல் தோன்றியுள்ளது. தற்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும், ஒரே கூட்டமைப்பாக தொடர்ந்து நீடிக்க வாய்ப்பில்லையென்றே தெரிகிறது.
தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் போன்ற சிறிய கட்சிகளையும், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற செயலிழக்கும் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தேர்தல் அரசியலில் நீடிக்க முடியாது என்பதை ரெலோ, புளொட் கட்சிகள் உணர்ந்துள்ளன.
இந்த விவகாரத்தில் புளொட் தீர்க்கமான முடிவுகள் எதையும் வெளிப்படுத்த தயங்குகின்ற போதும், ரெலோ மிக உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. ஜனநாயக போராளிகள் மற்றும் தமிழ் தேசிய கட்சிகளை கூட்டணியில் இணைக்காமலிருப்பது என்ற முடிவில் உள்ளனர். அவர்கள் கூட்டணியில் நீடிப்பதெனில், தனித்தரப்பாக நீடிக்க முடியாது.
கடந்த பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனத்தை இழந்தது சிறிகாந்தா, சுரேஸ் பிரேமச்சந்திரனின் பொறுப்பற்ற நடத்தையே காரணம் என்பதால், ரெலோ, புளொட் என்பன இந்த தரப்புக்களில் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கலந்துரையாடலை இதுவரை நடத்தாமல் தள்ளிவைத்தபடியிருந்தனர். தற்போது, கலந்துரையாடலுக்கான திகதி இறுதி செய்யப்பட்டுள்ளது.