அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், அட்டப்பளம் போன்ற பிரதேசங்களில் வாழும் 72 ஆயிரம் மக்களுக்கான குடிநீர் தொடர்பான விடயங்களுக்கு தீர்வுகான வேண்டுமென சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு நேரம் போதாது என பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு மக்களின் பிரச்சினை சார்ந்து முன்னெடுக்கப்பட விடயத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா கூறியது சிறுபிள்ளைத்தனமான விடயமாகும் என சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் எ. ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான தாஹிர், ஏ.எம்.மஞ்சுல ரத்னாயக்க, கே.கோடிஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ. நெளஷாட் மற்றும் திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த வருடமும் இவ் வருடமும் எமது மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் சம்மாந்துறை கொள்ளாவெளி வடிச்சல் பிரதான வாய்க்கால் (LB) உடைந்துள்ளமையால் விவசாயிகளின் காணிகள் பாதிக்கப்பட்டதுடன், சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, அட்டப்பளம் பிரதேசங்களில் வாழும் 72 ஆயிரம் மக்கள் குடிநீரின்றி மிகவும் நெருக்கடிக்குள்ளாகியிருந்தனர்.
இந்த வாய்க்கால் தற்காலிகமாக திருத்தியமைக்க நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளும், நீர்ப்பாசன திணைக்களத்தின் உயர்அதிகாரிகளும் இணைந்து செயற்பட்டனர். எனவே, சம்மாந்துறை கொள்ளாவெளி பிரதான வாய்க்கால் உடைக்கப்படாமல் நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு ஏற்படும் தொடர்ச்சியான நஷ்டங்களையும் 72,000 மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான தீர்வு கானலாம் என தெரிவித்தார்.
இது தொடர்பாக சம்மாந்துறை நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் திரு.கஜன் கருத்து தெரிவிக்கையில், நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் பெரிய அளவிலான குழாய்கள் பிரதான வாய்க்கால்களில் பொருத்தப்பட்டிருப்பதனால் வெள்ளம் ஏற்படும் போதும் பிரதான வாய்க்கால்கள் உடைந்து போகின்றது. எனவே நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபைக்குரிய பெரிய அளவிலான குழாய்கள் தனியாக பொருத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கருத்து தெரிவிக்கையில், இது ஒரு முக்கியமான மக்களுடைய பிரச்சினையாக இருப்பதனால் இது தொடர்பாக சம்மாந்துறை பிரதேச செயலாளர், சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியிலாளர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் Resevertion land அடையாளப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் பிரதான குழாய்களை பொருத்துவதற்காகன ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிந்தக அபேரத்ன அவர்களின் தலைமையில் விஷேட குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.ஹனிபா, நீர்ப்பாசன பொறியலாளர் திரு.கஜன், நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் ஹைதர் அலி ஆகியோர் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது