11.12.2024 (புதன்கிழமை) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் திருகோணமலையில் அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்ட “தமிழ் இலக்கிய விழா நிகழ்வில்” 2023 ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான “இளங்கலைஞர் விருது” வடிவேல் சக்திவேல் அவர்களுக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என ஏராளமானோர் மத்தியில் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இவ் வருடம், சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் (ஐ.ரி.ஆர்) இன் 28 வது ஆண்டினையொட்டி சனிக்கிழமை (14.12.2024) யாழ்ப்பாணம் ரில்கோ மண்டபத்தில் விழா ஒன்று இடம்பெற்றது. இதன் போது, சிறந்த ஊடகவியலாளருக்கான விருது – 2024 ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
18 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வரும், மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையைச் சேர்ந்த ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் அவர்கள், கிழக்கு மாகாணத்தின் பல கிராமப்புறங்களுக்கும் நேரில் சென்று மக்களின் பிரச்சனைகளை செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், ஆவணப்படுத்தல் தொகுப்புக்கள் ஊடாகவும் வெளிக்கொணர்ந்து வருகின்றார்.
2008இல் சிறந்த மக்கள் சேவை ஊடக விருது, 2018இல் சிறந்த கட்டுரையாளருக்கான விருது, 2022 இல் சுப்பிரமணியம் செட்டியார் விருது, உள்ளிட்ட தேசிய விருதுகளையும் மற்றும் கிராமிய, பிரதேச மட்டங்களில் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இதைவிட, 2022ல் அவர் தனது எழுத்தில் மாரியம்மன் பாடல் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு, பாடலாசிரியர், எழுத்தாளர் என இலக்கியத்துறையில் மிளிர்கின்ற அவர் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார். பல்துறை ஆற்றலுடைய ஊடகவியலாளராக விளங்கும் வ. சக்திவேல் அவர்கள், கடந்த யுத்த காலத்திலிருந்து தன் உயிரையே துச்சமென நினைத்து தமது ஊடகப் பணியை கைவிடாது இடைவிடாது இன்றுவரை புலம்பெயந்து செல்லாமல் இம்மண்ணிலேயே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்டு வருகின்ற தன்மை போற்றுதற்குரியதாகும்.
இவ்வாறாக பல துறைகளூடாக தனது திறன்சார்ந்து சமூகத்திற்கு சேவையாற்றி வருகிறார்.