மறுமலர்ச்சிக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் ஒரு அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
அதன்பின்னர் மறுமலர்ச்சிக்கான மக்கள் இயக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற பொறியியலாளர் மயில்வாகனம் சூரியசேகரம்- மறுமலர்ச்சிக்கான மக்கள் இயக்கம் என்பது இலங்கை மத்தியில் உருவான மக்கள் இயக்கமாகும். யாழ்ப்பாணத்தில் இந்த இயக்கத்தின் கிளையை இன்றைய தினம் ஸ்தாபித்திருக்கின்றோம்.
இதனுடைய நோக்கம் 76 வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் இதுவரை நடைபெறாத ஒரு மாற்றம் நடைபெற்றிருக்கிறது. அந்த மாற்றத்தை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பித்துள்ளோம்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வர முதல் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தார்கள். அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் ஆதரிக்கிறோம்.தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக இந்த ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்துவது என்பதை வற்புறுத்துவது எங்களுடைய பணியாக இருக்கும்.
அரசாங்கத்தை ஆதரித்து பேசுவது எமது நோக்கம் அல்ல. அவர்கள் இந்த கொள்கை திட்டத்தை மீறி செயல்படுகின்ற போது விமர்சிக்கவும் உரிமையும் உள்ளவர்களாகவும் நாம் இருப்போம். ஆக்கபூர்வமாக நாம் விமர்சனங்களை முன் வைப்போம்.
இதுவரை காலத்தில் நாம் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நமக்கு தெரியும். இவ்வளவு காலத்திற்கு பிறகு இவ்வாறான ஒரு மாற்றம் நடந்திருக்கின்றது.
இதனை நாங்கள் காத்து பேணவேண்டும்.மேலும் அதனை வளர்த்து முழுவதாக நடைமுறைப்படுத்துவதற்கு செயற்படுவோம் – என்றார்.