ரோயல் பார்க் கொலைக் குற்றவாளி டொன் ஷ்ரமந்த ஜூட் அந்தோனி ஜயமஹவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் தன்னிச்சையானது மற்றும் சட்டப்படி செல்லாது என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. ஜயமஹ மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படுவதால், அவரை நாடு கடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டது.
ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரயந்த பெர்னாண்டோ ஆகிய மூன்று நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இன்டர்போலின் உதவியுடன் ஜூட்டைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி சிறிசேன எடுத்த தீர்மானத்தின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தது. பொதுமன்னிப்பு கிடைத்த சிறிது நேரத்திலேயே ஜூட் ஜயமஹ நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி டொன் ஷ்ரமந்த ஜூட் அந்தோனி ஜயமஹ நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. எவ்வாறாயினும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து, ஜயமஹ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.