26.8 C
Jaffna
December 21, 2024
Pagetamil
உலகம்

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

பிரான்ஸ் நாட்டில் பல்வேறு ஆண்களுடன் இணைந்து மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 72 வயதான டொமினிக் பெலிகாட் என்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பிறப்பித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். இருப்பினும் இந்த குற்றத்தில் ஈடுபட்ட மற்ற ஆண்களுக்கு குறைந்தபட்ச தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணான கிசெல் பெலிகாட்டின் பிள்ளைகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த போது உலக அளவில் அது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கிசெல் பெலிகாட், துணிவின் அடையாளமாக தற்போது பார்க்கப்படுகிறார். சுமார் மூன்று மாத காலம் நடந்த இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்ட 51 பேருக்கு தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

இந்த வழக்கில் தனது குற்றத்தை டொமினிக் பெலிகாட் ஒப்புக் கொண்டார். அதனால் அவர் ஏற்கெனவே குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை அன்று தண்டனை விவரத்தை நீதிமன்றம் வெளியிட்டது. அவருடன் சேர்த்து இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. அவர்களுக்கு மூன்று முதல் பதினைந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம். இது பாதிக்கப்பட்ட கிசெல் பெலிகாட்டின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கோரிய தண்டனை காலத்தை காட்டிலும் குறைவாகும். இதில் இருவரது தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

டொமினிக் பெலிகாட் உடன் அவரது பிள்ளைகள் யாரும் பேச விரும்பவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது தண்டனை காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு தண்டனையை சிறையில் அனுபவிக்கும் வரையில் பரோல் பெற அவருக்கு தகுதி இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

26 முதல் 74 வயதுக்குட்பட்ட மற்ற 50 ஆண்களும் பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை முயற்சி ஆகியவற்றில் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். இந்த குழுவில் ஒரு சிப்பாய், ஒரு பத்திரிகையாளர், ஒரு சிறை கண்காணிப்பாளர், ஒரு செவிலியர் மற்றும் பண்ணை தொழிலாளர்கள் என பலதரப்பட்ட தொழில்களைச் சேர்ந்தவர்கள் இருந்தனர்.

இதேவேளை, இந்த வழக்கில் தண்டனை பெற்ற சக குற்றவாளிகளில் ஒருவரான ஜீன் பியர் மரேச்சலின் மனைவி சிலியாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்கும், தனது மகள் கரோலின் மற்றும் அவரது மருமகள்களான ஆரோர் மற்றும் செலின் ஆகியோரின் அநாகரீகமான படங்களை எடுத்ததற்கும் பெலிகாட் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.

தீர்ப்பு வெளியானதும் டொமினிக் குனிந்து நீதிமன்றத்தில் கதறி அழுதார்.

என்ன நடந்தது?

2011 ஆம் ஆண்டு தொடங்கி ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக, தன் மனைவி கிசெல் பெலிகாட்டுக்கு போதைப்பொருள் கொடுத்து, மயக்க நிலையில் பல்வேறு ஆண்களுடன் இணைந்தும், அவர்களை கொண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் டொமினிக் பெலிகாட். இதற்காக ஒன்லைனில் ஆட்களை அவர் தேர்வு செய்துள்ளார்.

இந்த வழக்கு பிரான்ஸ் நாட்டு மக்களை கொதிப்படைய செய்தது. அதனால் அங்கு மக்கள் போராட்டம் வெடித்தது. பெண்கள் மீது ஆண்கள் நடத்தும் வன்முறை வெறியாட்டம் என பலரும் தெரிவித்தனர். இந்நிலையில், இது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என மனித உரிமை நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆணாதிக்கத்தை ஒடுக்கும் நேரம் இது என பாதிக்கப்பட்ட கிசெல் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.

மகள் கரோலின் டேரியனுக்கு 20 வயதாக இருந்தபோது அவருக்கு போதைப்பொருள் கொடுத்ததாகவும், படுக்கையில் உள்ளாடையுடன் இருந்த அரை நிர்வாண புகைப்படங்களை கிளிக் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த படங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கணினியில் கண்டுபிடிக்கப்பட்டன.

இருப்பினும், டொமினிக் தனது மகளுக்கு “எதுவும் செய்யவில்லை” என்று வலியுறுத்துகிறார்.

நீதிமன்றத்தில், டொமினிக் தனது மகளை  புகைப்படங்களை எடுத்தது தனக்கு நினைவில் இல்லை என்றும் கூறினார்.

“நான் அவளைத் தொடவே இல்லை என்று அவளின் கண்களுக்கு நேராகச் சொல்கிறேன்,” என்று அவர் வலியுறுத்தினார்.

கரோலினின் பக்கம் திரும்பி, “நான் உன்னை ஒருபோதும் எதுவும் செய்யவில்லை” என்று மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் மகள் குறுக்கிட்டு, “நீ பொய் சொல்கிறாய், உண்மையைச் சொல்ல உனக்கு தைரியம் இல்லை! உன் முன்னாள் மனைவியைப் பற்றியும்!”

“பொய்யில் சாவாய்! தனியாக, பொய்யில் தனியே டொமினிக் பெலிகாட்!” என கூச்சலிட்டார்.

முன்னதாக, நவம்பரில், “நான் உன்னை இனி ஒருபோதும் பார்க்கமாட்டேன்! நீ ஒரு நாயைப் போல தனியாக இறந்துவிடுவாய்” என்று டொமினிக்கை நோக்கி கூச்சலிட்டிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

12 முறை விவாகரத்து செய்து… இணைந்த தம்பதி: 13வது முறை அரசாங்கமே கடுப்பானது!

Pagetamil

ரஷ்ய அணுசக்தி படைகளின் தளபதி குண்டுவெடிப்பில் பலி

Pagetamil

‘ரஷ்யாவிற்கு சென்றது திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல’: சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்

Pagetamil

420Kg நபரின் இறுதிச்சடங்கிற்கு உதவிய தீயணைப்புத்துறை!

Pagetamil

Leave a Comment