2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் போன சம்பவம் தொடர்பில், முன்னாள் பிரதி அமைச்சர் மற்றும் முன்னாள் புலிகள் தரப்பினரின் தலைவராக இருந்த கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளீதரன்) குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் (சி.ஐ.டி) நேற்றைய தினம் (19.12.2024) விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி, கொழும்பில் நடைபெற்ற இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு, மட்டக்களப்பு நோக்கி பயணித்தபோது, உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் கடத்தி காணாமல் ஆக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் சி.ஐ.டி யினர் கருணா அம்மானை நேற்று விசாரணைக்கு அழைத்தது. இதையடுத்து, கருணா அம்மான் கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அலுவலகத்திற்கு சென்று தனது வாக்குமூலங்களை அளித்தார்.
விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணா அம்மான், “உபவேந்தர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக சி.ஐ.டி யிடம் தான் வாக்குமூலம் கொடுத்ததாக கூறியுள்ளதோடு, இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் மேலும் தொடரும் என சி.ஐ.டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.