புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா-இலங்கை வணிக மன்றத்தில் உரையாற்றும்போது, இலங்கை ஜனாதிபதி, அநுர குமார திசாநாயக்க வணிகங்களுக்கு உகந்ததாகவும், திறமையானதுமான நாடாக இலங்கை மாறும் என தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான சந்தையைத் திறக்க இலங்கை தயாராக உள்ளது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பில் புதிய அரசாங்கம் முன்னுரிமைகளை வழங்கும் என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாக சூரிய மற்றும் காற்றாலைத் துறைகளில் இந்தியாவின் முதலீட்டை இலங்கை வரவேற்கிறது என்றும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப துறையில், இந்தியாவின் வலிமையைப் பற்றிப் பேசிய அவர், இலங்கையின் தொழில்நுட்ப துறையில் இந்திய முதலீட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையில் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு என்றும், இந்தியா இலங்கையுடன் தோளோடு தோள் சேர்ந்து செயல்படும் என்றும் இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.