சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகுதி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், இலங்கை நாடாளுமன்ற இணையத்தளம் அவரது சுயவிவரத்தில் இருந்து ‘கலாநிதி’ என்ற தலைப்பை நீக்கியுள்ளது.
முன்பு “கலாநிதி அசோக ரன்வல” என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இப்போது அவரது பெயர் “கௌரவ அசோக ரன்வல எம்.பி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம், அவர் கலாநிதி பட்டம் பெற்றதாகக் கூறப்படுவது சட்டபூர்வமானதா என்பது குறித்து மேலும் சந்தேகங்களை எழுப்புகிறது.
சபாநாயகரின் சுயவிவரத்திலிருந்து ‘கலாநிதி’ என்ற குறிப்பை நீக்கும் வகையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் இணையதளம் புதுப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகள் மற்றும் Google தேடல் முடிவுகளில் இன்னும் கலாநிதி அசோக ரன்வல என்றே காண்பிக்கின்றன.
சமூக ஊடக ஆர்வலர்கள் பேஸ்புக்கில் அவரது கல்வித் தகுதிகள் குறித்து கேள்வி எழுப்பியதை அடுத்து சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, இந்த விடயத்தில் ஜேவிபியும், சபாநாயகரும் பொறுப்புக்கூற வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்தன.
முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் சபாநாயகர் பட்டத்தை நிரூபிக்குமாறு சவால் விடுத்துள்ளார்.
சபாநாயகர் பதிலளிக்கவில்லை என்றால் தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசப்பிரிய வலியுறுத்தினார்.
ரன்வல சபாநாயகராக நியமிக்கப்பட்ட போது, நாடாளுமன்றத்தின் ஊடக அறிக்கை, அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியலில் பட்டம் பெற்றதோடு, ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியலில் கலாநிதிப் பட்டம் பெற்றதாக விவரித்தது. அவர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் முன்னர் உள்ளூர் அரசாங்கப் பதவிகளில் பணியாற்றியவராகவும் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதேவேளை, சபாநாயகரின் தகுதிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு சபாநாயகர் பதில் அளிப்பார் என அமைச்சரவை பேச்சாளர் இன்று தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, சபாநாயகரின் அறிக்கையைத் தொடர்ந்து அடுத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று பேச்சாளர் கூறினார்.