யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ். பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, அட்டகாசத்தில் ஈடுபட்டமை தொடர்பில்- வைத்தியசலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தார் என வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த அர்ச்சுனா, பாதுகாப்பு உத்தியோகத்தரை தள்ளிவிட்டு, பணிப்பாளரின் அறைக்குள் நுழைந்துள்ளார். பின்னர், பணிப்பாளருடன் தேவையற்ற விதமாக முரண்பட்டுள்ளார்.
தானொரு எம்.பியெனவும், தன்னை சேர் என அழைக்க வேண்டும், தன்னை கண்டால் எழும்பி நிற்க வேண்டும், முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்த வந்துள்ளேன் என அடிப்படை விடயங்கள் பற்றிய அறிவில்லாமல் உளறிக்கொட்டியுள்ளார். பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவருக்கு முறையாக விளங்கப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு முன்னரும் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியராக கடமையாற்றும் போது மன்னார் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து வைத்தியசாலையின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததாக முன்னர் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, பொலிஸாரால் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடப்படுகின்றது.
மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தினடிப்படையில், பிரபலம் தேடுவதற்காக அர்ச்சுனா மன்னார் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து இடையூறு விளைவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.