திருகோணமலை மாவட்டம், கிண்ணியா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பை ஒழிக்கும் முதற்கட்ட நடவடிக்கைகள் நேற்று (08.12.2024 – ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமானது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் கிண்ணியா கிளையினால் ஏற்பாடு செய்திருந்த முதல் கட்ட நடவடிக்கையின் அங்குரார்பண நிகழ்வு கிண்ணியா மாஞ்சோலைச்சேனை ஜீம்ஆ பள்ளிவாசலில் இடம் பெற்றது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி, கிண்ணியா பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.சி.கே.எச். பெர்னாண்டோ, கிண்ணியா நகர சபை செயலாளர் எம்.கே.அணிஸ், குறிஞ்சங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம்.அஜித், கிண்ணியா ஜெம்மிய தொல்ழுமா சபை தலைவர், உறுப்பினர்கள், சுகாதார பரிசோதகர்கள், நகர சபை ஊழியர்கள், பொலீஸ் அதிகாரிகள், பள்ளிவாசல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கலந்துகொண்ட அதிகாரிகள் பின்னர் வீடு வீடாக சென்று டெங்கு நுளம்பு பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். நீர் தேங்கி நிற்பதன் காரணமாக அது கொள்ளத்தக்க பொருட்களை அகற்ற வேண்டிய தேவைப்பாடு உள்ளது எனவும் அதன் மூலம் டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்க முடியும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
வருங்காலங்களில் ஏதாவது அரச உதவிகளானாலும், அரசு சார்பற்ற உதவிகளானாலும் வீட்டுச் சூழல் சுத்தமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே உதவிகளை பகிர்ந்து வழங்க தாம் திட்டமிட்டிருப்பதாகவும், கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி இறந்தவர்கள் சிறுநீரக, இதய வருத்தங்களுக்கு உள்ளானவர்கள் மற்றும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களே ஆவர் என்றும், இதைப் போலவே டெங்கும் நோய் என்றும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார். டெங்குலிருந்து பாதுகாப்பு பெற வேண்டும் எனில் சூழ உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் எலிக்காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெற வேண்டும் எனவும் பாதுகாப்பு வழிமுறையை இதன் போது கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.