மட்டக்களப்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் சிவில் சமூக செயற்பாட்டாளருக்கான ஒரு செயலமர்வு நேற்றைய தினம் (07.12.2024 – சனிக்கிழமை) இடம்பெற்றது. செயலமர்வின் பின்னர் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்வேறு சிவில் சமூக குழுக்களை பிரநிதித்துவப்படுத்தக்கூடிய பிரதிநிதிகள் ஆகியோர் ஊடக சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சார்பிலும் அக் கால்நடை சங்கங்களை பிரநிதித்துவப்படுத்தக்கூடிய பிரதிநிதிகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். சமகாலத்தில் எதிர்நோக்கின்ற தமது பிரச்சினை சார்ந்தும் அதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஊடக சந்திப்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் தங்களுக்குடைய கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இவ் ஒன்றுகூடல் இலங்கையில் இருக்கக்கூடிய தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய சவால்கள், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடலாக காணப்பட்டது.
இதில் மட்டக்களப்பிலுள்ள வளங்கள் சூறையாடப்படுவது தொடர்பாக பலரும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். நீர்கொழும்பு, மன்னார், திருக்கோணமலை, மட்டக்களப்பு எனும் 04 இடங்களில் 04 தடவையாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்பட்டிருந்தது. பிரச்சினை நீண்ட காலமாக தீர்க்கப்படாது குறிப்பாக, இன்று வரை தீர்க்கப்படாமல் இழுபறியாகிக் கொண்டிருக்கும் விடயமாகும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரம சிங்க அவர்களினுடைய காலத்திலும் பல்வேறுபட்ட பேச்சு வார்த்தைகள், போராட்டங்கள் இடம்பெற்றிருந்த போதிலும் இதற்கான தீர்வுகள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. புதிய அரசாங்கத்தினுடைய காலத்திலாவது மேய்ச்சல் தரைப் பிரச்சினை தீர்க்கப்படுமா?? எனும் ஏக்கம் அப் பகுதி பண்ணையாளர்களிடம் காணப்படுகிறது.
தற்போது பெரும்போக நெற் செய்கைக்காக ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல இடங்களிலே விதைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற நிலையில் கால்நடைகளை மேய்ச்சல் தரைகளை நோக்கி நகர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையிலே பண்ணையாளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் தமது பிரச்சினை சார்ந்து புதிய அரசாங்கம் தமக்கான தீர்வுகளை தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர் சங்க தலைவர் சீனித்தம்பி தியாகராஜா அவர்கள் நேற்றைய ஊடக சந்திப்பில் பல கருத்துக்களை கூறியிருந்தார்.
குறிப்பாக கடந்த காலங்களில் இப் பிரச்சினை தொடர்பாக தாம் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் சார்ந்து மேற்கொண்ட சட்ட, அஹிம்சை ரீதியான அறவழிப்போராட்டங்கள் மற்றும் தொடர்ச்சியான சுழற்சி முறை போராட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட்டும் இதற்கான தீர்வுகள் கிடைக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், 2023.09.15 திகதி அறவழிப் போராட்டத்தை தாம் மேற்கொண்டதாகவும், இன்றோடு (07.12.2024) 451 நாளாக இப் போராட்டம் நடந்து கொண்டு இருக்கின்றது என்றும், சகல தரப்பினருக்கும் இப் பிரச்சினை தொடர்பாக அறிவித்தல் வழங்கியது தொடர்பாகவும் கூறியிருந்தார். மேலும், தமிழ், சிங்கள, முஸ்லீம் பண்ணையாளர்கள் நிம்மதியாக வாழ அந்த மேய்ச்சல் தரையை பதிவு செய்து தரும்படி அதிமேதகு ஜனாதிபதி, ஆளுநர், அமைச்சர்கள் அறியப்படுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.