கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களால் நேற்றைய தினம் 06.12.2024 (வெள்ளிக்கிழமை) புதிய செயலாளர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டது.
மூவினங்களும் செறிந்து வாழும் கிழக்கு மாகாண செயலாளராக, சகல இனத்தவரையும் உள்ளடக்கிய வகையில் புதிய செயலாளர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், மாகாணத்தின் அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான முக்கிய அதிகாரியாக செயல்பட, முதலமைச்சின் செயலாளராக, முஸ்லீம் சமய பண்பாட்டு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் பைசல் அப்தீன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
மேலும், மாகாணத்தில் நிர்வாக அடிப்படையில் பணி நியமனங்கள் மற்றும் மாற்றங்கள் நடத்த மாகாண பொது சேவை ஆணைக்குழு செயலாளர் லியாகத் அலி அவர்களும், விவசாயிகள் நலன், உற்பத்தி மற்றும் விவசாய தொழில்நுட்ப முன்னேற்றங்களில் கவனம் செலுத்தவென, மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எச்.ஈ.எம்.டப்ளியூ.ஜி. திசாநாயக்கா அவர்கள் விவசாய அமைச்சின் செயலாளராகவும், புதிய சாலைகள், பாலங்கள், மற்றும் போக்குவரத்து தொடர்பான திட்டங்களை மேம்படுத்த, மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக பணியாற்றிய எம்.எம்.நஸீம் அவர்கள் மாகாண சாலை அபிவிருத்தி செயலாளராகவும் தமக்கான நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.
மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஜி.கோபாலரத்தினம் அவர்கள் மாகாண சபையின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பிற்கெனவும், மாகாண ஆளுநரின் செயலாளராக பணிபுரிந்த எல்.பி.மதன்னாயக்கா சுகாதார அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.