அம்பாறை – காரைதீவு மாவடிப்பள்ளியில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 6 மாணவர்களில் இருவரின் சடலத்தை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மாணவர்களின் சடலங்கள் இன்று (27) காலை கண்டெடுக்கப்பட்டன.
நேற்று (26) மத்ரஸா பாடசாலையை முடித்து விட்டு உழவு இயந்திரத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவர் குழுவொன்றே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.
ஆபத்தான முறையில் உழவு இயந்திரத்தை ஓட்டிச் சென்றதாகவும்; உயர் அழுத்த நீரோட்டம் காரணமாக உழவு இயந்திரம் கவிழ்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின் போது உழவு இயந்திரத்தில் 13 பயணிகள் பயணித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு முதல் 05 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் மேலும் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன ஆறு பேரும் மாணவர்கள் என்பதும் அவர்களில் இருவரின் சடலங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உழவு இயந்திரத்தில் 13 பேர் பயணித்ததாக கூறப்பட்ட போதும், அந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. விபத்தை அடுத்து உழவு இயந்திரத்தின் சாரதியும் உதவியாளரும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனரா என்று ஆராயப்படுகிறது.
உழவு இயந்திரத்தை செலுத்தியவர் சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டிருக்கவில்லையென்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.