போலியான ஜேர்மன் வீசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான குடிவரவு திணைக்களத்தினரால் இன்று (26) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் வவுனியா நகரைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்களில் 26 வயதுடைய ஆணும் 24 வயதுடைய பெண்ணும் அடங்குவர்.
இவர்கள் இருவரும் இன்று காலை 07.10 மணியளவில் இந்தியன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் AI-281 விமானத்தில் இந்தியாவின் புதுடில்லி ஊடாக நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நோக்கி புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இரண்டு சந்தேக நபர்களும் விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு நோக்கங்களுக்காக தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்ற நிலையில், இரு சந்தேக நபர்களின் ஆவணங்களில் தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ளுமாறு குடிவரவுத் திணைக்களத்தின் எல்லை அமலாக்கப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டது.
இவர்களிடமுள்ள ஜேர்மன் விசாக்கள் போலியானவை எனவும், அவர்களது கடவுச்சீட்டில் உள்ள இலங்கை மற்றும் ஜேர்மன் முத்திரைகள் அனைத்தும் போலியானவை எனவும் தெரியவந்துள்ளது.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது குறித்த இளைஞனின் விசாவை நோர்வே பிரஜை ஒருவரும் யுவதியின் வீசாவை அவரது தாயாரும் தயாரித்துள்ளனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.