நான் பாராளுமன்றத்தில் வைத்து அப்போது உறுப்பினராக இருந்த அனுரகுமார திசாநாயக்கவிடம் “வட கிழக்கைப் பிரித்த உங்கள் கட்சிக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்” என்று கூறினேன். அவர் “இருந்து பாருங்கள்” என்று கூறினார். அவர் கூறியது இப்பொழுது நடந்து விட்டது. அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன்.
அத்துடன், இந்தத் தேர்தலில் தோல்வி கண்ட பலர் மீண்டும் எழுச்சி பெறாமல் நாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய அரசாங்கத்தை விட அவ்வாறான சுயநல சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் தமிழர்களுக்கும் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளுக்கும் கூடிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிட்ட மணிவண்ணன் குழுவினரும் தேர்தலில் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
க.வி.விக்னஸ்வரனின் முழுமையான கேள்வி பதில் வருமாறு-
கேள்வி :- தமிழ்த் தேசியம் அழிந்துவிட்டதா? தேர்தல் முடிவுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன அல்லவா?
பதில் :- தமிழீழம் பெற முடியாது போய்விடுமா என்று தம்பி பிரபாகரனிடம் ஒருவர் கேட்டார். அதற்கு அவர் அளித்த பதில் “தமிழீழத்தைப் பெறவேண்டிய அவசியம் இல்லை. அது ஏற்கனவே இருக்கின்றது. அதனைப் பாதுகாப்பதற்காகத் தான் நாங்கள் போராடுகின்றோம்.” என்றாராம்.
அதே போல் தமிழ்த் தேசம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றது. அதனைப் பாதுகாக்கும் மனோநிலையே தமிழ்த் தேசியம். தமிழ்த்தேசம் அழிந்துவிடவில்லை. தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசத் தெருக்கள் பலவற்றில் இராணுவத் தடைகள் நீக்கப்பட்டதைப் பார்த்திருப்பீர்கள். தமிழர் தம் தேசத்தில் வீதித் தடைகள் தேவையில்லை என்று அரசாங்கம் முடிவெடுத்ததே எமது பிரதேசம் தமிழர் தம் தேசமே என்ற அடிப்படையிலேயே. ஆனால் அவர்கள் ஒரே நாட்டிற்குள் தமிழ்ப் பேசும் பிரதேசங்களில் ஏன் இந்தப் பாகுபாடு என்ற அடிப்படையில்த் தான் தமது தீர்மானத்தை எடுத்துள்ளனர். அவர்களுக்கும் எமக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் பெரியதொன்றில் சிறு பகுதி நாம் என்பது அவர்கள் சிந்தனை. சுதந்திரமான சம அலகுகள் கொண்டதே இலங்கை என்பது எமது பார்வை.
வடக்கு கிழக்கு தமிழ்மொழி பேசும் பிரதேசங்கள் என்ற உண்மையை உணர்ந்து செயலாற்றுபவர்கள் தமிழ்த் தேசியத்தை அழிப்பவர்கள் என்று அடையாளம் காட்டமுடியாது.
தமிழ்த் தேசிய சிந்தனையை வைத்து வியாபாரம் நடத்தியவர்கள் தேர்தலில் காணாமல் போயுள்ளார்கள். தமிழ்த் தேசிய சிந்தனையை ஏளனம் செய்து கட்சிகளைப் பிரித்து சுயநல அரசியல் நடத்திய ஒருவர் காணாமல் போயுள்ளார். தமிழ்த் தேசியவாதிகள் நாம் என்று மார்தட்டி அதே நேரத்தில் சொந்த நலம் கருதி அரசியல் செய்தவர்கள் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் மீண்டும் வந்து தமிழர் வாழ்வை சின்னாபின்னமாக்கவிடாது அவர்களை இறைவன் வீட்டிற்கு அனுப்பியுள்ளான். உங்கள் கேள்விக்குக் காரணம் என்ன என்று பார்த்தோமானால் தேர்தலில் அரசாங்கம் வடகிழக்கில் ஆசனங்கள் பெற்றமையே என்பது புலப்படும். ஆனால் நடந்த தேர்தல் முடிவுகள் எமக்கு இறைவனால் தரப்பட்ட வரப்பிரசாதமாகும்.
தமிழ்த் தேசியத்தை முன்னர் ஆதரித்தவர்கள் இன்னமும் தமிழ்த் தேசியத்துடன் தான் இருக்கின்றார்கள். ஆனால் பல சுயேட்சைக் கட்சிகளின் காரணத்தாலும் பல வருட கால கட்சிகள் தேர்தல் உடன்பாடுகளுக்கு இடம் கொடுக்காமையாலும் அவர்கள் செய்வதியாது பிரிந்து நின்று வாக்களித்துள்ளார்கள்.
உதாரணத்துக்கு டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் முன்னைய வாக்குகளே இம் முறை யாழ்ப்பாணத் தொகுதியில் அரசாங்கக் கட்சிக்குப் போயுள்ளது. புதிதாக வாக்களிக்க தகைமை பெற்ற இளைஞர்களின் வாக்குகளும் அரசாங்கக் கட்சிக்குப் போயுள்ளன. அவை அரசாங்கக் கட்சி செய்த வலுவான தேர்தல் பிரச்சாரத்தின் நிமித்தமே அரசாங்கக் கட்சிக்குச் சென்றுள்ளன. ஆனால் தமிழ்த் தேசியத்துடன் நிற்கும் கட்சிகளின் வாக்குகளை கூட்டிப் பார்த்தால் தமிழ்த் தேசியத்திற்கான எம் மக்களின் ஆதரவு குறையவில்லை என்றே தெரிகின்றது.
இது எமது ஒற்றுமையின்மையை எமக்கு உணர்த்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் தோற்றமை தமிழ்த் தேசியம் அழிந்துவிட்டதால் என்று கூறமுடியாது. நாம் ஒருங்கிணைந்து தமிழ்த் தேசியத்தைக் கொண்டு செல்ல முன்வராமையே காரணம். அடுத்த முறை சுதந்திரமான தேர்தல் என்று ஒன்று இருந்து நாம் இணைந்து போட்டியிட்டால் தமிழ்த் தேசியம் மீண்டும் வெல்லும். இவ்வாறான உடன்பாடு இம்முறை திருகோணமலையில் எட்டப்பட்டதால் தமிழ்ப் பேசும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால் ஒற்றுமை என்பது சுட்ட மண்ணுக்கும் சுடாத மண்ணுக்கும் ஏற்படக் கூடிய ஒரு உடன்பாடாக இருக்க முடியாது. பல வருடகாலம் சுயநல அரசியலில் ஈடுபட்ட தமிழ்த் தேசியம் பேசுவோருக்கும் உண்மையாகத் தமிழ் தேசியத்தை உணர்ந்து வருங்கால சந்ததியினர் சார்பாக செயலாற்றத் துடிப்போருக்கும் இடையில் உடன்பாடுகள் ஏற்பட்டால் அது தேர்தல் காலங்களில் ஓரளவிற்கு மட்டும் நன்மை தருவதாக அமையலாம்.
ஆனால் அது நிரந்தரமாகாது. உதாரணத்துக்கு பாண்டவர்களும் கௌரவர்களும் ஒற்றுமைப்பட வேண்டும் என்று பலர் சுட்டிக் காட்டினார்கள். சுயநலமும் ஆணவமும் நிறைந்த கௌரவர்கள் தம்மை முன்னிலைப்படுத்தி ஒற்றுமை ஏற்படுவதைத் தடுத்துவிட்டார்கள். குறிப்பிட்ட தருணங்களில் இருசாராரும் ஒன்றிணைந்தார்கள். ஆனால் அது கட்டாயம் நிமித்தம் நடந்ததே ஒழிய மனமாற்றத்தாலோ புரிந்துணர்வாலோ அல்ல. பீஸ்மர் இறந்த போது, துரோணர் இறந்த போது இருசாராரும் சேர்ந்து மரண சடங்குகளில் ஈடுபட்டார்கள். ஆனால் அப்போதும் ஒருவர் மற்றவரை சூழ்ச்சியாளர்கள் என்று குறை கூறிக் கொண்டேதான் இருந்தார்கள். தர்மிகளும் அதர்மிகளும் ஒற்றுமைப்படமுடியாது. அதர்மிகள் அழிக்கப்பட்டால்த்தான் தர்மிகள் நாட்டை ஆளமுடியும் என்று கிருஸ்ண பரமாத்மா கூறினார். அதற்காக அதர்மிகள் அனைவரும் சுவடு தெரியாமல் அழிக்கப்பட வேண்டும் என்பதே நியதி என்றார். பாண்டவர்களும் அதன்பின் அவர்கள் பேரனார் பரீட்சித்தும் தர்ம அரசாங்கம் நடத்த முன் கௌரவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு அதுவே நடந்தேறியது. வருங்காலங்களில் இந்தத் தேர்தலில் தோல்வி கண்ட பலர் மீண்டும் எழுச்சி பெறாமல் நாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய அரசாங்கத்தை விட அவ்வாறான சுயநல சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் தமிழர்களுக்கும் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளுக்கும் கூடிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
“மாற்றமே வாழ்க்கையின் நியதி. நடந்தவை பற்றியும் இன்றைய நிலை பற்றியும் சதா சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் எதிர்காலத்தைக் கட்டாயமாக மறந்து விடுகின்றார்கள்” என்றார் முன்னைய அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எவ்.கெனெடி அவர்கள். ஆகவே எதிர்காலத்தில் நீங்கள் சுயநல அரசியலில் இருந்து விடுபட, இம்முறை தோற்ற பலரை மீண்டும் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
நான் பாராளுமன்றத்தில் வைத்து அப்போது உறுப்பினராக இருந்த அனுரகுமார திசாநாயக்கவிடம் “வட கிழக்கைப் பிரித்த உங்கள் கட்சிக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்” என்று கூறினேன். அவர் “இருந்து பாருங்கள்” என்று கூறினார். அவர் கூறியது இப்பொழுது நடந்து விட்டது. அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
ஆனால் எதிர்காலம் அவ்வாறே இருக்கப் போவதில்லை. தமிழ் மக்கள் தமது நாளாந்த பொருளாதார தேவைகளுக்கு அப்பால் தமிழர்களின் வருங்காலம் பற்றி சிந்திக்க வேண்டிய காலம் வரத்தான் போகின்றது அல்லது வந்துவிட்டது!
இன்று வட கிழக்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் உறைவிடம் என்று மறைமுகமாக ஏற்கும் அரசாங்கம் நாளை வேறு விதமாகச் சிந்திக்காது என்பதற்கு உத்தரவாதம் எதுவுமில்லை. இனிமேல் தேர்தல்கள் நடந்தால் (?) அடுத்து வருகின்ற அரசாங்கங்கள் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு ஊடாக இனவாட்சி ஒன்றை நிறுவமாட்டா என்று கூறமுடியாது. ஏன் இன்றைய அரசாங்கமே தமது தேர்தல் கால கருத்துக்களை மாற்றி ஒற்றையாட்சியின் கீழ் அவர்களுக்குக் கிடைக்கும் அதிகாரங்களை வடகிழக்கு தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராகப் பாவிக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ஆகவே தமிழ்த் தேசம் அழியவில்லை. எனவே தமிழ்த் தேசியமும் அழியவில்லை. தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியத்தை ஆதரித்தோர் தம்முள் பிரிபட்டு அரசாங்கத்தை வெல்லப் பண்ணியிருக்கின்றார்களே ஒளிய தமிழ்த் தேசியத்தைத் தமிழ் மக்கள் கைவிட்டுவிட்டார்கள் என்று அர்த்தமில்லை.
ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சம்பந்தமான சர்வதேச உடன்பாட்டின் உறுப்புரை ஒன்றின் கீழ் இலங்கையின் வடகிழக்கு தமிழ்த் தேசம் என்பதை எந்த ஒரு இலங்கை அரசாங்கமும் ஏற்காத வரையில் வடகிழக்கு தமிழர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே இருக்கும்.