தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற நிலம் வழங்கிய விவசாயிகளை நேரில் அழைத்து விருந்தளித்து நடிகர் விஜய் கவுரவப்படுத்தியுள்ளார். மேலும் நிலம் வழங்கி மாநாடு நடைபெற உதவியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெற விக்கிரவாண்டி பகுதியில் உள்ள விவசாயிகள் நிலம் கொடுத்து உதவினர். இந்நிலையில் மாநாடு நடைபெற இடம் வழங்கிய நிலத்தின் உரிமையாளர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு விருந்தளித்து கவுரப்படுத்தியுள்ளார் விஜய்.
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை விருந்து நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விருந்தளித்த விஜய் நன்றி தெரிவித்ததுடன், குடும்பத்தினருடன் உரையாடினார். மேலும் விவசாயிகளுக்கு தாம்பூலம் போன்ற சிறிய பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.