தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
கட்சியின் பிரமுகர் விந்தன் கனகரட்ணத்தை கட்சியிலிருந்து நீக்க, கட்சியின் உயர்மட்டத்தினர் மேற்கொண்ட முயற்சியையடுத்து, திருகோணமலை கூட்டத்துக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரெலோவின் யாழ் மாவட்ட பிரமுகர்கள் குருசாமி சுரேன் மற்றும் விந்தன் கனகரட்ணத்துக்கு இடையில் சில காலமாக நிலவிய பனிப்போர், தற்போது பகிரங்க மோதலாக வெடித்துள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு சில நாட்களின் முன்னதாக, யாழில் ஊடகவியலாளர்களை சந்தித்த விந்தன், ரெலோவின்- சுரேனும் தொடர்புபட்டதாக குறிப்பிட்டு- லைக்கா நிறுவனத்துடனான பணக்கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
யாழ் மாவட்டத்தில் ரெலோ சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் விந்தன் கனகரட்ணத்தையும் களமிறக்க வேண்டுமென ரெலோ தலைமைக்குழு முடிவெடுத்திருந்த போதும், இறுதியில் அது நிகழவில்லை. சுரேனின் தலையீட்டில் விந்தனின் பெயர் வெட்டப்பட்டதாக விந்தன் தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.
கட்சித்தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், கட்சி உறுப்பினர்களை சமமாக நடத்தாமல், சுரேனின் தாளத்துக்கு ஆடுகிறார் என்ற விமர்சனம் சில காலமாகவே இருந்து வருகிறது.
இந்த பின்னணியில், விந்தன் கனகரட்ணம் யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தன்னைப் பற்றிய அவதூறு பரப்பியதாக குறிப்பிட்டு, சுரேன் குருசாமி நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தார்.
அவர் நீதிமன்ற நடவடிக்கையெடுத்தால் அதை எதிர்கொள்ள தயராக இருப்பதாகவும், மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்த தயராக இருப்பதாகவும் விந்தன் கனகரட்ணம் அறிவித்தார்.
இதை தொடர்ந்து சில நாட்களின் முன்னதாக, ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் சூம் தொழில்நுட்பத்தின் வழியாக நடந்தது. இதில் விந்தனை கட்சியை விட்டு நீக்கும் யோசனையை, சுரேன் சமர்ப்பித்தார். இதற்கு ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த தலைமைக்குழு முறைப்படி கூட்டப்படவில்லை, தலைமைக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்படவில்லையென்பதையும் சுட்டிக்காட்டினர்.
தலைமைக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் முறைப்படி அறிவித்து, எதிர்வரும் புதன்கிழமை திருகோணலையில் தலைமைக்குழு கூட்டத்தை நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தினர். இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, தன்னை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கையெடுத்தால், கட்சித் தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.