‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் வரும் நவ.24 இல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. இதில் பன்வார் சிங் என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனம் கலந்த காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார் ஃபஹத் பாசில். தற்போது 2-ம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. உலகம் முழுக்க டிசம்பர் 5-ம் தேதி ‘புஷ்பா 2’ வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் நாடு முழுவதும் பெரும் ஹிட் ஆனது. அதற்கு அப்பாடலில் ஆடிய சமந்தாவின் நடனமும் ஒரு காரணம். தமிழில் இப்பாடலை ஆண்ட்ரியா பாடியிருந்தார். இப்பாடல் ரீல்ஸ், ஷார்ட் வீடியோக்களாக பெரும் வைரல் ஆனது. இந்த நிலையில் ‘புஷ்பா 2’ படத்திலும் இதே போல ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. ‘கிஸ்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்பாடலில் ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இப்பாடல் வரும் நவ.24 அன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘ஊ சொல்றியா’ பாடலைப் போலவே இந்த பாடலும் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
சமீபத்தில் வெளியான ‘புஷ்பா 2’ படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதில் அல்லு அர்ஜுன் – ஃபஹத் ஃபாசில் இருவருக்குமான மோதல் தான் கதையாக இடம்பெற்றுள்ளது. முதல் பாகத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஃபஹத் ஃபாசில், 2-ம் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.