மாற்று அரசியற் பண்பாட்டின் வளர்ச்சியும் மக்களின் வாழ்வில் முன்னேற்றமும் ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்தோடு வாக்களித்த மக்களுக்கு சமத்துவக் கட்சி தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. பன்மைத்துவ அடிப்படையில் செயற்பாட்டு அரசியல் பண்பாட்டைத் தொடரும் சமத்துவக் கட்சியை விரும்பிய மக்கள் என்றும் தோற்பதில்லை என சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளை அடுத்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட, சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
தேர்தல் வெற்றி – தோல்விகள் சிறிய அளவிலேயே பாதிக்கும். அதற்கு அப்பால்
அவர்கள் எப்போதும் சமூக முன்னேற்றத்திலும் சமூக அசைவியக்கத்திலும்
நம்பிக்கை கொண்டு மக்களுக்காக உழைப்பவர்களாகவே இருப்பர். அந்த உணர்வும்
அதற்கான அரசியற் பெறுமானமும் தளர்வின்றித் தொடர வேண்டும். இந்த
நம்பிக்கையோடு தேர்தல் பணிகளை ஆற்றியதோடு, வெற்றியை நோக்கி உழைத்த
அனைவருக்கும் எமது நன்றி என சமத்துவக் கட்சியின் தலைவரும் ஐ.ம. சக்தியின்
முதன்மை வேட்பாளருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின்போது மலையகக் கட்சிகள், முஸ்லிம் கட்சிகளோடு
நாமும் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்திருந்தோம். தமிழ்
பேசும் பிராந்தியங்களில் ஐக்கிய மக்கள் சக்தியே பெரும்பான்மையான ஆதரவைப்
பெற்றும் இருந்தது. அதனுடைய தொடர்ச்சியாக, நாட்டில் ஏற்பட்டிருந்த
அரசியல் மாற்றத்துக்கான சூழலைக் கருத்திற் கொண்டு நாம் ஒரு மாற்று
வியூகத்தை வகுத்தோம். அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியிலேயே பாராளுமன்றத்
தேர்தலையும் எதிர்கொள்வதாகத் தீர்மானித்திருந்தோம். அப்படித்தான்
தேர்தலில் போட்டியிட்டிருந்தோம். எமது வெற்றியைத் தமக்கான- மக்களுக்கான –
வெற்றியாகும் என்று கருதி தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
ஆயினும் தேர்தலில் நாம் உரிய இலக்கினை எட்ட முடியாமற் போய்விட்டது.
இருந்தாலும் சமூக மாற்றம், பொருளாதார உயர்ச்சி, சூழல் பாதுகாப்பு,
அரசியல் உரிமைகளுக்கான உத்தரவாதம் போன்றவற்றை விரும்புகின்றவர்களாகவும்
இதற்காகச் செயற்படுகின்றவர்களாகவும் எமது பணிகள் தொடரும். மக்களும்
ஆதரவாளர்களும் தொடர்ந்தும் எம்முடைய பணிகளில் இணைந்து பங்கேற்றும்
பங்களித்தும் தொடர்ந்தும் எம்மோடு பயணிக்க வேண்டும் எனக்
கேட்டுக்கொள்கிறேன்.
அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்று சொல்லப்படுவதுண்டு. வெற்றியும்
தோல்வியும் கூட அப்படித்தான். நாம் மக்களுக்கான அரசியலைத் தொடர்வதில்
என்றும் பெருமைக்குரியவர்களாகத் தலை நிமிர்ந்து நிற்போம். அந்த
நிமிர்வுடன் உங்கள் ஆதரவு மக்கள் பணிகளுக்கான வலுவைச் சேர்க்கட்டும் என
வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.