குருநாகல் பிரதேசத்தில் இயங்கி வரும் பிரமிட் நிதி நிறுவனம் ஒன்றின் ஊடாக வைப்பாளர்களிடம் சுமார் 1000 கோடி ரூபாவை மோசடி செய்த நபரும் அந்த நிதி நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த அவரது மனைவியும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 52 வயதான தம்மிக்க குமார ரணசிங்க என்பவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், அவர் இன்று அதிகாலை 12.00 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இவர் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்களத்திற்கு செல்வதற்கு முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
குறித்த நிதி நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய இவரை அழைத்துச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் காத்திருந்த அவரது மனைவியான 42 வயதுடைய காலி வடுகம பிரதேசத்தைச் சேர்ந்த சமுத்ரா சுரங்கனி ஹேமச்சந்திர என்பவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
52 வயதுடைய குறித்த சந்தேகநபர் பிரிமிட் வர்த்தகம் ஊடாக சுமார் 1,800 மில்லியன் ரூபா பண மோசடியை செய்துவிட்டு, ஒரு வருடத்திற்கு முன்னதாக நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.