அரசியல் காரணங்களின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 15 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை உடனடியாக இலங்கைக்கு வருமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி அருணி விஜேவர்தனவினால் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
இதன்படி, நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், பிரித்தானிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, இந்தியாவின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் ஷெனுகா செனவிரத்ன, அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வர,
ஜப்பானுக்கான தூதுவராக ரோட்னி பெரேரா, மலேசியாவின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட முன்னாள் விமானப்படைத் தளபதி சுமங்கள டயஸ், நேபாளத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் விமானப்படை தளபதி சுதர்சன் பத்திரன,
கியூபாவுக்கான தூதுவரான முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன,
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரான முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன,
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள உதய இந்திரரத்ன,
கென்யா உயர்ஸ்தானிகரான கனகநாதன், சீசெல்ஸ் உயர்ஸ்தானிகரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியின் சகோதரரான ஷிமால் விக்ரமசிங்க மற்றும் ஈரான் தூதுவராக நியமிக்கப்பட்ட மொஹமட் ஷாஹிட் ஆகியோரை உடனடியாக இலங்கைக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலியாகவுள்ள தூதுவர் பதவிகளுக்கு வெளிநாட்டு சேவையாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.