தவெக கட்சியின் கொள்கைப் பாடலை அறிவு உருவாக்கி இருக்கிறார். இதற்காக விஜய்க்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று (அக்.27) நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கின. கட்சியின் தலைவர் விஜய் கொடி ஏற்றினார். பின்னர் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் விஜய் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இந்த மாநாட்டில் தவெக கட்சியின் கொள்கைப் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை யார் எழுதி, பாடியிருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அந்தப் பாடலை அறிவு எழுதி, இசையமைத்து பாடியிருப்பது உறுதியாகி இருக்கிறது.
இது தொடர்பாக அறிவு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “நான் அவரிடம், என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? என்று கேட்டேன். “உன்னால் மட்டுமே முடியும்!” என்றார். தவெக கட்சியின் கொள்கைப் பாடலை இசையமைக்க என்னை நம்பியதற்கு நன்றி விஜய் சார். உங்கள் குரலை பதிவு செய்வது என் வாழ்வின் மிகப்பெரிய நினைவாக இருக்கும். உங்கள் அரசியல் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். மிக்க நன்றி சார்.” என்று தெரிவித்துள்ளார்.