2024 பொதுத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் நேற்று (23) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.
வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் முன்னர் நிராகரிக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசா மற்றும் இருவரினால் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மாவட்ட தேர்தல் அதிகாரி பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனுவை நிராகரித்ததாக மனுதாரர்கள் கூறினர்.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் முடிவு சட்டத்திற்கு முரணானது என்று கூறி, அந்த முடிவை செல்லாது என்று உத்தரவிடுமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
உண்மைகளை கருத்திற்கொண்டு, பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை நிராகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை அங்கீகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆஜரானார்.