யாழ்ப்பாணத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் காணாமல் போன சம்பவம் தொடர்பான ஆட்கொணர்வு விசாரணைக்காக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தைத் தவிர இலங்கையின் வேறு எந்த நீதவான் நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராக இருப்பதாக அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நேற்று (22) உயர் நீதிமன்றில் அறிவித்தார்.
10.12.2011 இல் இடம்பெற்ற காணாமல் போனமை தொடர்பில் அவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு முறைப்பாடு தொடர்பில் சாட்சியமளிக்க 27.09.2019 அன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது, கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் நோட்டீஸ் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கோத்தாபய ராஜபக்சவின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அழைப்பாணையை நிறைவேற்றுவதைத் தடுக்கும் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து லலித், குகனின் பெற்றோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுவை மார்ச் 18ஆம் திகதி திரும்ப அழைப்பதற்கான திகதியையும் நிர்ணயித்தது. பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி நுவான் போபகே ஆஜரானார்.