இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ‘ஓய்வு’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது. கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்த அல்லது உயிரிழந்த அரசியல்வாதிகளைத் தவிர பிறர் எவரும் ஓய்வு பெறவில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்தார்.
இவ்வாறான சூழ்நிலைகளை தான் மாற்றங்கள் என்பர் என பொதுத்தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி கூறினார்.
“முன்னாள் எம்.பி.க்களில் பெரும்பாலானோர் இம்முறை தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி உள்ளனர். மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுதான்,” என்றார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்கட்சியினரால் சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களை பொய்யானவை என்பதை 21 நாட்கள் முடிவதற்கு முன்னரே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் நிரூபிக்க முடிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்க்கட்சி முகாமில் இப்போது பொதுத் தேர்தலுக்கான கோஷங்கள் ஏதும் இல்லாமல் போய்விட்டது என்றார்.
“எதிர்க்கட்சி முகாம் எங்களுக்கு எதிராக தவறான விமர்சனங்களைச் செய்தது. தேசிய மக்கள் சக்திவெற்றிக்குப் பிறகு மோதல்கள் ஏற்படும் என்றும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகள் இருக்கும் என்றும் சொன்னார்கள்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறையும், சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட நாடாகும் எனப் பலவற்றைக் கூறினர்.
ஆனால் இந்த விமர்சனங்கள் அனைத்தும் 21 நாட்களுக்குள் அவர்கள் கண் முன்னே சிதைந்துவிட்டன,” என்று அவர் கூறினார்.