இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் இரண்டு முக்கிய அரசியல்வாதிகளுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையே ஜெய்சங்கர் சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு இந்தியாவின் தொடர்ச்சியான முழுமையான ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
“எஸ்.ஜெய்சங்கரின் இலங்கைப் பயணத்தின் போது அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் அடிக்கடி கூறுவது போல், ‘பலமான மற்றும் செழிப்பான சுற்றுப்புறம் என்பது அனைவரின் நலனிலும் உள்ளது.’ பிராந்திய வளர்ச்சிக்கான நமது பரஸ்பர நலன்களை ஆதரிக்கும் அதே வேளையில், இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்“ என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது, தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடன் ஏற்படுத்தப்பட்ட வலுவான உறவை புதிய அரசாங்கம் தொடர்ந்தும் பேணுவதாக தான் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது, இதில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜெய்சங்கர் இன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். இன்று இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார். கடந்த மாதம் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் எந்தவொரு வெளியுறவு அமைச்சரும் மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
அங்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.