திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று சுமூகமாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார்.
மேலும் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்கு பெட்டிகள் தற்போது அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கின்றன.இங்கு கொண்டுவரப்படும் அனைத்து வாக்குப் பெட்டிகளும் முறையாக வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டு வருகின்றன.அம்பாரை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
தபால் மூல வாக்களிப்பானது 26775 பேர் வாக்களித்துள்ளதுடன் இது 99.99 வீதம் ஆகும்.தற்போது தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 5 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது.இதற்கென மொத்தமாக 56 வாக்கெண்ணும் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதில் 14 தபால் மூலம் வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 184653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
மேலும் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் பவ்ரல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.மேலும் வாக்களிப்பு நிலையமான அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-பாறுக் ஷிஹான்-