யாழ்ப்பாணம் மிருசுவில் 8 பேர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஜனவரி 15 ஆம் திகதி பரிசீலிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மாற்றுக் கொள்கைக்கான நிலையம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன் ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், சம்பந்தப்பட்ட மனுவில் எதிர்மனுதாரர்கள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில், ஐந்து வயது குழந்தை மற்றும் 7 பொதுமக்களை வெட்டிக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் தண்டனை பெற்ற இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பான உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் (17) உத்தரவிட்டது.
யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பெற்ற சுனில் ரத்நாயக்கவுக்கு இதே மனு தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின்; இதை ஜனவரி 15ம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
19.12.2000 அன்று இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக சுனில் ரத்நாயக்க உள்ளிட்டோருக்கு எதிராக சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்ட வழக்கை விசாரித்த கொழும்பில் உள்ள விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
மே 20, 2017 அன்று, அந்த உத்தரவை எதிர்த்து சுனில் ரத்நாயக்க தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பை உறுதி செய்தது.
அதன் பின்னர் திரு கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 2020 மார்ச் 26 அன்று குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்தார்.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜரானார்.