எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (2) வெளியிடப்படவுள்ளது.
இந்த விஞ்ஞாபனத்தில், தமிழ் பொதுவேட்பாளர் பிரசாரகர்கள் முன்வைக்கும் பொதுவாக்கெடுப்பு, சமஸ்டிக்கான ஆணை போன்ற விவகாரங்கள் இடம்பெறாது என பொதுவேட்பாளர் தரப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தெரிவித்துள்ளன.
தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்க வேண்டுமென தமிழ் சமூகத்தில் சில தரப்புக்கள் தீவிரம் காட்டிய போது, அவர்கள் முன்வைத்த பிரதான சுலோகம்- பொதுவேட்பாளரை களமிறக்குவது பொதுவாக்கெடுப்புக்காகவே என்பதே.
அதாவது, இலங்கை அரசாங்கம் நடத்தும் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதி தேர்தலாக அணுகாமல்- செலவே இல்லாமல் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான பொதுவாக்கெடுப்பாக கருத வேண்டும் என்பதே.
அத்துடன், சமஸ்டிக்கான ஆணையாகவும் பொதுவேட்பாளர் களமிறக்கப்படுகிறார் என இன்னும் சில தரப்புக்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துரையாடலில், பொதுவேட்பாளரை களமிறக்குவது- பொதுவாக்கெடுப்புக்காகவோ அல்லது சமஸ்டிக்கான ஆணையாகவோ அல்ல என தமிழ் கட்சிகள் தெரிவித்துள்ளன.
சிவில் சமூகமென்ற பெயரில் செயற்படும் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதும் தரப்பினர் தயாரித்திருந்த விஞ்ஞாபன வரைவில்- பொதுவேட்பாளர் எனப்படுவது பொதுவாக்கெடுப்புக்கானது, சமஸ்டிக்கான ஆணை கோருகிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதையடுத்து, மேற்படி விவகாரங்கள் நீக்கப்பட்டு, இனப்பிரச்சினை தீர்வு, அன்றாட பிரச்சினைகளை உள்ளடக்கிய கோரிக்கைகளை முன்வைத்து விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது.