மன்னார் மாவட்டத்தில் தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்ட உயர் பதவியிலுள்ள ஒருவர், தேர்தல் கடமைக்காக வழங்கப்பட்ட வாகனத்தை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தி, திருக்கேதீச்சர பெருமானின் துணையால் தப்பிப் பிழைத்துள்ளார்.
இந்த சுவாரஸ்ய சம்பவம் அண்மையில் நடந்தது.
முன்னாள் வடமாகாண செயலாளர் ஒருவருக்கு நெருக்கமான அதிகாரி அவர். அந்த செயலாளரும் மனிதர்தானே. அவரது பதவிக்காலத்திலும் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சில பல அதிகாரிகளிடம் முறைப்பாடு உள்ளது.
செயலாளர் எய்தால் அம்பாக பாய ஒரு அதிகாரி இருந்தார். அவர்தான் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிப்பவர். தற்போது, இந்தியாவில் மோடி அரசு மீது பரவலான குற்றச்சாட்டு ஒன்றுள்ளது. அமலாக்கத்துறை போன்ற அரச நிறுவனங்களை அரசியல் பழிவாங்கல் ஆயுதமாக அவர்கள் பாவிக்கிறார்கள் என. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது… அது… இதுவென அமலாக்கத்துறையும் எதிர்க்கட்சிகளை வேட்டையாடி வருகிறது.
இங்கும் அந்த மொடல் நடவடிக்கையென வைத்துக் கொள்ளுங்களேன்.
இம்முறை ஜனாதிபதி தேர்தல் பணியில் நமது அதிகாரியும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அவருக்கு வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அவர் அந்த வாகனத்தை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திய ஆதாரமொன்று தேர்தல் திணைக்களத்துக்கு ஆதார பூர்வமாக வழங்கப்பட்டு விட்டது.
இந்த விவகாரம் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டு, அந்த அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
திருக்கேதீச்சர ஆலயத்தில் இரண்டு ஐயர்மாருக்கிடையில் சண்டை வந்து விட்டதென தகவல் வந்ததாகவும், அதை தீர்த்துக்கொள்ள சென்றதாகவும், அதையே யாரோ புகைப்படம் எடுத்து தவறாக தகவலளித்து விட்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டு தப்பித்துக் கொண்டார்.
எல்லாம், கேதீச்சரத்தானுக்கே வெளிச்சம்!