எதிர்காலத்தில் சிங்கள தலைவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டி அடிப்படையில் தீர்வுகள் ஏதும் கிடைக்குமாக இருந்தால் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கணேசபிள்ளை குகன் தெரிவித்தார்.
இன்று திருகோணமலையில் அமைந்துள்ள தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்..
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்-
இதுவரை நாட்டில் பல ஜனாதிபதிகள் ஆட்சி செய்த போதிலும் தமிழர்களுக்கான எந்த ஒரு தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் இதற்கு மாறாக வடக்கு கிழக்கு எங்கும் பௌத்த விகாரைகள் அமைத்து தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மீள்குடியேற்றம் மாத்திரமே இடம்பெற்று வருகின்றமையினால் தொடர்ந்தும் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதுடன் தேர்தல் வாக்குச்சாவடிக்கு செல்வதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
மேலும் எதிர்காலத்தில் சிங்கள பேரினவாத தலைவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் உரிமைகளான தாயகம்,தேசியம், சுயநிர்ணயம் எனும் அடிப்படையில் சமஸ்டி முறையில் ஒரு தீர்வு அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருக்குமாக இருந்தால் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மாவட்ட அமைப்பாளர் கணேசபிள்ளை குகன் தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் ஸ்ரீ.பிரசாத்-
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு சிங்கள தலைவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு அவர்கள் தயார் இல்லை. 13வது திருத்தத்தில் கூட மிகக் குறைந்த அதிகாரங்களை வழங்கி தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி அரசியல் செய்யும் கலாச்சாரம் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.
எனவே தமிழ் மக்கள் அனைவரும் இதனைப் புரிந்து கொண்டு சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரையும் புறக்கணிக்க வேண்டும் எனவும் இந்தியாவின் ஆதிக்கத்தில் ஒற்றுமை எனும் பெயரில் களம் இறக்கப்பட்டுள்ள பொது வேட்பாளர் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஒற்றுமை எனும் விடயம் ஒரு பிழையான தலைமைகளுக்கு வழங்குவது என்பது “தமிழ் மக்கள் தமது தலைகளிலே தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் செயல்” எனவும் சுட்டி காட்டினார்.
பொது கட்டமைப்பு எனும் பெயரில் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனும் கோரிக்கை 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழ் அரசியலை குழி தோண்டி புதைத்த துரோகிகள் ஒன்றிணைந்து ஒற்றுமை கோசத்துடன் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்கி உள்ளார்கள் தமிழ் மக்கள் இவர்களை நம்பி வழி தவறி விடக்கூடாது.
ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளை எடுத்துக் கொண்டால் பாராளுமன்றத்திலும் சரி சர்வதேசத்திலும் சரி தமிழர்களின் சமஸ்டி முறைப்படி இதுவரை பேசியது கிடையாது, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு துணை போவது, அரசை பாதுகாப்பது, அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக வரும் நெருக்கடிகளுக்கு பாதுகாப்பாக இருப்பது போன்ற செயற்பாடுகளையே செய்து வந்தார்கள்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து தாங்கள்தான் தமிழ் தேசிய வாதிகள் என போலி தமிழ் தேசியவாதிகள் இந்த சங்கு சின்னத்திற்கு பின்னால் இருக்கின்றார்கள் தமிழ் மக்கள் இது தொடர்பில் நிதானமாக செயல்பட வேண்டும் என தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் ஸ்ரீ.பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ரவ்பீக் பாயிஸ் –