தியாகி திலீபனின் நினைவிடத்தில் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் அஞ்சலி செலுத்திய போது, அவருடன் குடிமைச்சமூகத்தினர் உள்ளிட்ட ஏற்பாட்டாளர்கள் அஞ்சலி செலுத்த வராதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சலி செலுத்த வருமாறு அழைப்பு விடுத்த போதும், ஏற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்து பெருமளவானவர்கள் கலந்து கொள்ளவில்லையென பொதுவேட்பாளர் ஏற்பாட்டிலுள்ள ஒருவர் தெரிவித்தார். எனினும், அவர் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.
தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரன் நேற்று (27) யாழ்ப்பாணம், நல்லூரிலுள்ள தியாகி திலீபனின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மவை சேனாதிராசாவின் மகன் சே.கலையமுதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
எனினும், பொதுவட்பாளரை களமிறக்கிய தரப்பில் பெரும்பாலானவர்கள் கலந்துகொள்ளவில்லை.
பொதுவேட்பாளரை களமிறக்கிய தரப்பிலுள்ள அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை முன்னர் விடுதலைப் புலிகளுடன் ஆயுதரீதியாக மோதியவை. விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை தனிப்பட்டரீதியில் அவர்கள் அஞ்சலிப்பதில்லை.
எனினும், பொதுவேட்பாளர் தரப்பில் சிவில் சமூகமென தம்மை குறிப்பிட்டபடி அங்கம் வகிக்கும் 7 தனிநபர்களும் தியாகி திலீபன் அஞ்சலியை தவிர்த்து விட்டனர்.
பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தனது அரச உத்தியோகத்தை பாதுகாப்பதற்காக, பொதுவேட்பாளர் விவகாரத்தில் பகிரங்க கூட்டங்கள், நிகழ்வுகளில் பங்கேற்பதில்லையென முடிவெடுத்துள்ளதை ஏற்கெனவே தமிழ் பக்கம் வெளியிட்டிருந்தது.
பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதும் நிலாந்தன், விடுதலைப் புலிகள் சார்பு அடையாளமெடுக்க விரும்பவில்லையென குறிப்பிட்டதாக அறிய முடிகிறது.
எனினும், இவர்கள் இருவரும் முன்னதாக, தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதுடன், வாராவாரம் செய்தியாளர்களை சந்தித்து பேசும் யோதிலிங்கம், முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர். இதன் காரணமாக இவர்கள் யாரும் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.