25.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

சஜித்துக்கு சைக்கிள் அனுப்பிய பதில்!

நடைபெறவிருக்கும் தேர்தல் தொடர்பான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக சஜித் பிரேமதாஸ அனுப்பிய கடிதத்திற்கு முன்னணியினர் பதில் கடிதம் அனுப்பியுள்ளனர்.

செ.கஜேந்திரனால் அனுப்பப்பட்ட அந்த கடிதத்தின் விபரம் வருமாறு-

கடந்த 2024.08.11 திகதியிட்ட கடிதம் மூலம் எமது கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பில் எமது கட்சியின் நிலைப்பாடுகளை தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளும் நோக்கில் இக்கடிதத்தினை எழுதுகின்றேன்.

கடந்த 2022 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் விளைவாக – கடந்த 2022 இல் ஜனாதிபதி வெற்றிடம் ஏற்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர்களால் வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் பாராளுமன்றினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது, அதன்போது நீங்கள் எமது ஆதரவினைக் கோரி எம்மை அழைத்து சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தீர்கள்.

அச்சந்திப்பின்போது, இலங்கையினை பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், நீண்ட காலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை எட்டும் வகையில், ஒற்றையாட்சி அரசியல் யாப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசியல் யாப்பு கொண்டுவரப்படல் வேண்டியதன் அவசியத்தினை எமது தலைவர் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் உறுதியாக வலியுறுத்தியிருந்தார். எனினும் அத்தகைய உறுதிப்பாடுகள் கிடைக்காத நிலையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பிலிருந்தும் நாம் விலகியிருந்தோம் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

எமது அரசியல் இயக்கத்தினைப் பொறுத்தவரை
• ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு வடிவிலான தீர்வும் தமிழ் மக்களது இனப்பிரச்சினையைத் தீர்க்கப்போவதில்லை.
• ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தம் தீர்வுமல்ல தீர்வுக்கான தொடக்கப்புள்ளியுமல்ல.
• மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்தில் (2016-2019) தயாரிக்கப்பட்ட இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பு வரைபானது ‘ஏக்கிய இராச்சிய’ அடிப்படையிலானது என்பதனை சுட்டிக்காட்டுவதுடன் – அதனை நாம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம்.

கடந்த 76 வருடங்களாக இலங்கையின் அனைத்து மதங்களுக்கும், இனங்களுக்கும் சம அந்தஸ்தை வழங்க மறுத்து, தேசிய இனங்களுக்கிடையில் தீராப்பகையையும் வெறுப்பையும் தீவிரமாக்கி, தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போருக்கு வழிகோலியதுடன் போர் முடிவடைந்து 13 வருடங்களின் பின்னர் நாடு பொருளாதார வங்குரோத்து நிலை அடைவதற்கும் காரணமாக அமைந்தது தற்போதய ஒற்றையாட்சி அரசியல் யாப்பேயாகும். எனவே தோல்வியடைந்த அந்த ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்படாதவரை சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிப்பதில்லை என்றும் – ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டுடன், வடக்கு – கிழக்கு தமிழர் தேசத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

கடந்த 75 வருடங்களாக புரையோடிப்போயுள்ள சிறிலங்காவின் இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கும், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும், அனைத்து இன, மத மக்களும் நிம்மதியாக, அச்சமின்றி வாழ்வதற்கும், புலம்பெயர் தமிழ் மக்கள் அச்சமின்றி முதலீடுகளை மேற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்களாக வாழக்கூடிய சமஸ்டி அடிப்படையிலான தீர்வே ஒரே வழியாகும் என்பதே எமது கொள்கை நிலைப்பாடாகும்.

இதனடிப்படையில் –
• ஒற்றையாட்சி முறைமை நீக்கப்படல் வேண்டும்.
• இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
• மதசார்பற்றதாக இருத்தல் வேண்டும்.
• தமிழர் தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
• தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
• இவற்றின் அடிப்படையில் சமஸ்டித் தீர்வு எட்டப்படல் வேண்டும்.

கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட போர்க் குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக் குற்றங்களுக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையைக் கோரி நிற்கும் தமிழ் மக்கள் கடந்த 2009 ஆம் ஆண்டின் பின்னரும் தமிழர் தேசத்தின் மீது தீவிரமாக்கத் தொடரும் கட்டமைப்பு சார் இவழிப்பினைத் தடுக்க மேற்படி அங்கீகாரம் அவசியமானதென தமிழ் மக்கள் கருதுகின்றார்கள்.

எனவே எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது ஆதரவினை தாங்கள் கோரியுள்ள நிலையில் – எமது ஆதரவு தேவைப்படும் ஜனாதிபதி வேட்பாளராகிய தாங்கள் – கடந்த 76 வருடங்களாக இலங்கையின் தோல்விக்குக் காரணமான ஒற்றையாட்சி முறைமையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே அனைத்து இனங்களையும் அரவணைத்து இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையை தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுவதன் மூலம், நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நீங்கள் மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில் தீர்வுகாண விளைகின்றீர்கள் என்ற உண்மை இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்களுக்கு வெளிப்படுத்தப்படல் வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

அவ்வாறு தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேற்படி விடயங்கள் தெளிவாகவும் முழுமையாகவும் உள்ளடக்கப்படும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற நிலைப்பாட்டினை மீள் பரிசீலனை செய்வது தொடர்பாக நாம் ஆராய முடியும் என்பதனையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘இளம் பெண்களை நிர்வாணமாக்கி….’- வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பிய தமிழ் பெண் வெளியிட்ட அதிர்ச்சிக் கதைகள்!

Pagetamil

அனுரவிற்கு மக்கள் வாக்களித்தது ஊழல், மோசடியை சுத்தம் செய்யவே தவிர வாகன உதிரிப்பாகங்களை கழற்ற அல்ல!

Pagetamil

ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் பொங்கல் நிகழ்வு

east tamil

இரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீன தந்தை, மகன் கைது

east tamil

சீன ஜனாதிபதியை சந்திக்கும் அனுர

east tamil

Leave a Comment