மக்கள் மீது எல்லையற்ற சுமையை சுமத்தியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தளர்த்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த பின்னர் நேற்று (16) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை தரிசனம் செய்ய வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் கூறியதாவது:
ஜாதி, மதம், கட்சி வேறுபாடின்றி, மக்களை மையமாகக் கொண்ட ஒரு சிறந்த பொதுச் சேவையை நடத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்.
மதுபானசாலை உரிமம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி மக்களை கவரும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் சூதாட்ட கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன் எனவும் தெரிவித்தார்.
மக்களை துன்பங்களிலிருந்து விடுவித்து வளமான மற்றும் சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார். மக்கள் மீது இயன்றளவு சுமையை ஏற்றிவிட்டு நாடு தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக ஜனாதிபதி பிரகடனம் செய்கிறார். இது புதிய இயல்பு. உற்பத்திப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, முதலீடும், சேமிப்பும் செய்ய முடியாத சூழ்நிலையில் மக்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார்.