விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
படத்தில் விஜய் கதாபாத்திரத்துக்கு காந்தி என பெயரிடப்பட்டுள்ளது. தொடக்கத்திலேயே அவர் யார் என்பதை பில்டப்புடன் சொல்கிறார் பிரசாந்த். தொடர்ந்து விஜய் தொடர்பான சாகச காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் வந்து செல்கின்றன. தொடக்கத்தில் வரும் கிராஃபிக்ஸும், விஜய்யின் இளம் வயது தோற்றமும் ஏனோ ஒட்டவில்லை. மொத்த ட்ரெய்லரின் நீளம் 2.51 நிமிடங்கள் என்றால் அதில் 2 நிமிடங்கள் சண்டைக் காட்சிகள் வந்து செல்கின்றன. அந்த அளவுக்கு அதீத ஆக்ஷனைக் கொண்ட படமாக இருக்கும் எனத் தெரிகிறது.
‘பிகில்’ படத்தில் விஜய் அப்பா என கத்துவது போல இந்தப் படத்திலும் அதே டோனில் கத்துகிறார். அப்பா – மகன், ஆக்ஷன், காதல், நண்பர்கள், புதிய மிஷன், சென்னையில் குண்டு வெடிக்கப்போகுது போன்றவை விஜய்யின் முந்தைய படங்களில் பார்த்து பழகியதால் எந்த புதுமையையும் உணர முடியவில்லை. கிட்டத்தட்ட முந்தைய படங்களில் பார்த்த ஒரே டெம்ப்ளேட் வகையறா காட்சிகள் அயற்சி கொடுக்கின்றன. இதனால், வெங்கட் பிரபுவிடமிருந்து புதுமை விரும்பியவர்களுக்கு படத்தில் சர்ப்ரைஸ் இருந்தால் நல்லது.
மோகன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. அது படத்தில் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என தெரியவில்லை. “காந்தி வேஷம் போட்டு பாத்திருப்ப. முதல் தடவ காந்தியே வேஷம் போட்டு பாக்றேன்” போன்ற வசனம் வந்து செல்கிறது. யுவனின் பின்னணி இசையும் பெரிதாக ஈர்க்கவில்லை. வழக்கமாக ரசிக்க வைக்கும் விஜய்யின் குறும்புத்தனங்கள் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனத் தெரிகிறது. “இனிமே சத்தியமா குடிக்கவே கூடாது” என்ற ‘மங்காத்தா’ பட அஜித் வசனத்தை பேசுவது கவனிக்க வைக்கிறது.
விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் செப்டம்பர் 5ஆம் திகதி திரைக்கு வருகிறது.