திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் ஊழல் தொடர்பில் ஊடகங்களுக்கு தாம் வெளியிட்ட கருத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு அவதூறு விளைவித்ததாக தமக்கும் சக நண்பர்களுக்கும் எதிராக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில கிழக்கு மாகாண ஆளுநர் சார்பில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மக்கள் குரல் அமைப்பின் அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில நேற்று (12) வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்.-
கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி, வீண்விரயம் மற்றும் பிழையான அரசியல் கலாச்சாரம் தொடர்பாக தமது நிலைப்பாட்டினை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் தமது கருத்தை தான் பகிர்ந்ததாகவும், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு அவதூறு விளைவித்ததாகவும் கிழக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பாடல் பிரிவினரினால் தமக்கும் தமது சக நண்பர்களுக்கும் எதிராக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு அதற்கான வாக்குமூலம் நேற்று பதிவு செய்யப்பட்டதாக கிழக்கு மாகாண மக்கள் குரல் அமைப்பின் அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
தாம் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி, வீண் விரயம், அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் ஆளுநருக்கு எவ்வாறு அவதூறு விளைவிக்கும் என்பது தொடர்பில் எமக்கு தெரியாது, தாங்கள் தெரிவித்த கருத்துக்களுக்கும் ஆளுநருக்கும் தொடர்பு இருக்குமாயின் “தொப்பி யாருக்கு அளவோ அவர் போட்டுக் கொள்ளட்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
எது எவ்வாறு இருப்பினும் தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் மன்னிப்பு கோரவோ, மண்டியிடவோ முடியாது அவர்களுக்கு வேண்டுமென்றால் சட்டரீதியான எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ள முடியும், இது தொடர்பில் தாங்கள் நீதிமன்றத்தை நாடவும் தயாராக உள்ளதாகவும் தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் பொலிஸ் விசாரணையில் எமது நிலைப்பாட்டினை தெளிவாக கூறியதாக அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
-ரவ்பீக் பாயிஸ்-