திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் திருட்டு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (11) முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை இந்துக்கள் சார்பில் பலர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “எங்கே எங்கே தாலிக்கொடி எங்கே,ஆளுநர் அவர்களே ஆலயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும்,மத்திய அதிகார மாகாண அதிகாரம் என்று அரசியல் கூறி பிழையை மறைக்க துணை போகாதே, கோனேஸ்வரர் ஆலயம் ஒன்றும் வங்கி அல்ல, குற்றம் இல்லை என்றால் ஏன் தவறுகளை மூடி மறைக்க முயல்கிறீர்கள், யாரை காப்பாற்ற ஏன் இந்த கபடம், ஆளுநர் அவர்களே அதிகார வர்க்கத்திடம் இருந்து கோவிலை பொதுமக்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுங்கள் மற்றும் கோணநாதன் கயவர்களின் கூடாரம் இல்லை பாரபட்சம் அற்ற நடவடிக்கை எடுங்கள் என்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை இந்துக்கள் சார்பில் கலந்து கொண்ட சிலர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தனர்.
கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் திருக்கோணேஸ்வர ஆலயத்தில் ஆண்டாண்டு காலம் பழமை வாய்ந்த பல நகைகள் திருட்டுப் போய் உள்ளதாகவும் இது தொடர்பில் ஆலய பரிபாலன சபையினர் பொடுபோக்காக இருப்பதாகவும் திருக்கோணேஸ்வர ஆலய திருட்டு தொடர்பில் துரித கவனம் செலுத்தி குறித்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கயவர்களை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதாக திருவண்ணாமலை இந்து மக்கள் சார்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
குறித்த கோனேஸ்வரர் ஆலய திருட்டு சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இவ்வாறு கருத்து தெரிவித்தார்,
நாட்டில் ஒரு வணக்கஸ்தலம் ஆலயம் ஒன்றில் இவ்வாறு திருட்டு சம்பவங்கள் இடம்பெறும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது குறித்து திருட்டு சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளுக்கு தான் பணித்துள்ளதாகவும் குறித்த திருட்டு சம்பவம் திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெறும் இரண்டாவது சம்பவம் என்பதுடன் இதன் பிற்பாடு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஏனைய பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ளவாறு நம்பிக்கையாளர் சபை ஒன்று உருவாக்கப்பட்டு குறித்த சபையின் ஊடாக திருக்கோணேஸ்வரர் ஆலயம் பிரதேச செயலாளரிடமிருந்து நிர்வாக சபையினருக்கு ஒப்படைக்கப்பட்ட காலம் தொட்டு இன்று வரை அதன் கணக்கெடுப்புகள் கணக்கெடுக்கப்பட்டு அதனை சரியான முறையில் வழி நடத்துவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் தான் அதனை கவனத்தில் கொண்டு சரியான நடைமுறை ஒன்றை கொண்டு வருவதற்கு தயாராக இருப்பதாக இதன் போது தெரிவித்திருந்தார்.
-ரவ்பீக் பாயிஸ்-