25.7 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

மன்னாரில் அதானி காற்றாலை மின்திட்டம்: உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!

மன்னார், விடத்தல்த்தீவு பிரதேசத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் நிலையத் திட்டத்திற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான அமைச்சரவை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் நேற்று (02) தீர்மானித்துள்ளது.

அதன்படி, உரிய ஆட்சேபனைகளை ஓகஸ்ட் 20ம் திகதி அல்லது அதற்கு முன் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் தொடர்பான வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு எதிர்மனுதாரர்களுக்கு பெஞ்ச் உத்தரவிட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை ஒக்டோபர் 14 ஆம் திகதியும், அடுத்த விசாரணை ஒக்டோபர் 29 ஆம் திகதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வனவிலங்கு மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம், சுற்றுச்சூழல் நீதி மையம்  ஆகியவை மனுக்களை தாக்கல் செய்திருந்தன. பிரதமர் தலைமையிலான அமைச்சரவை, சட்டமா அதிபர் உள்ளிட்டோர் இங்கு பிரதிவாதிகளாக உள்ளனர். மன்னார் பகுதியில் புதிதாக முன்மொழியப்பட்ட காற்றாலை திட்டம் ஒன்று நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் நிர்மாணிக்கப்படவுள்ள பகுதியானது பறவைகள் அடிக்கடி இடம்பெயரும் பிரதேசம் எனவும் அவற்றின் இடம்பெயர்வு பாதை அமைந்துள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் திட்டம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என மனுதாரர்கள் கூறுகின்றனர். இதனால் அப்பகுதிக்கு வரும் வலசை பறவைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என மனுதாரர்கள் கூறுகின்றனர்.

பறவைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும், விலங்குகள் காயமடையும் அபாயம் உள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற காற்றாலை மின் திட்டங்களால் ஏராளமான பறவைகள் இறந்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன், இந்திய நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இந்திய அரசு மற்றும் இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தமாக கருதி அமைச்சரவை எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது, தொலைநோக்கு பார்வையற்றது என மனுவில் உண்மைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

எனவே காற்றாலை திட்டம் தொடர்பாக எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை செல்லாது என மனுக்களில் கோரப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த திட்டத்தை அமுல்படுத்துவது இந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் பிரகடனம் செய்யுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சீகிரியாவில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்

east tamil

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

east tamil

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

Leave a Comment