பொலிஸ் பரிசோதகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர், பெண்கள் மற்றும் ஆண்களிடமிருந்து பணம், தங்கம் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்ததுடன், அவர்களை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவரும், அவருக்கு உதவிய முச்சக்கர வண்டி சாரதியும் கெஸ்பேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் பெரும் எண்ணிக்கையானவர்களை மிரட்டி கொள்ளையடித்துள்ளார். அவ்வாறு திருடிய பணத்தை தொலைக்காட்சி நாடக நடிகைகள் உள்ளிட்ட அழகிய யுவதிகளுடன் உல்லாசமாக இருக்க செலவு செய்துள்ளதாகவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இரண்டு கையடக்கத் தொலைபேசிகளில் சந்தேகநபர் தொலைக்காட்சி நாடக நடிகை மற்றும் பல பெண்களுடன் உடலுறவு கொள்ளும் காட்சிகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து போலி பொலிஸ் அடையாள அட்டை, 10200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், தொலைக்காட்சி நடிகை ஒருவரின் தேசிய அடையாள அட்டை மற்றும் நான்கு பெண்களின் தேசிய அடையாள அட்டைகள், ஆண் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, 18 தொலைபேசி சிம் அட்டைகள் மற்றும் 5 கைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர் பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய போது தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியங்க சில்வாவின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி பொலிஸ் அடையாள அட்டையை சந்தேகநபர் தயாரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் யுவதி ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.