ஐ.பி.சி நிறுவன உரிமையாளர் கந்தையா பாஸ்கரன், புதிய சுதந்திரன் உரிமையாளர் மு.அகிலன் ஆகிய இருவரையும் தமிழ் அரசு கட்சியில் இருந்து நீக்குவதென்ற யோசனை தொடர்பில், அடுத்தடுத்த மத்திய செயற்குழு கூட்டங்களில் தீர்மானம் எடுப்பதென முடிவாகியுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் (16) வவுனியாவில் நடந்த போது இந்த விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.
இருவர் மீதும் நடவடிக்கையெடுக்க வேண்டுமென எம்.ஏ.சுமந்திரனே வலியுறுத்தினார்.
கட்சியின் தேசிய மாநாட்டுக்காக கந்தையா பாஸ்கரன் வழங்கிய ரூ.5 இலட்சம் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறும், அந்த பணத்தை தானே தருவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
தேசிய மாநாட்டுக்கா பண உதவி வழங்குமாறு தானும், சீ.வீ.கே.சிவஞானமுமே கோரியதாகவும், அதனாலேயே பாஸ்கரன் பணம் தந்ததாகவும் சி.சிறிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கடந்த முறை தேசிய மாநாட்டை நடத்திய போது, கட்சி அதற்காக பணம் தரவில்லையென்றும், அங்குள்ள வர்த்தகர்களிடம் பணம் சேகரித்தே மாநாட்டை நடத்தியதாக முன்னாள் எம்.பி பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அதை தவறு சொல்லவில்லையென குறிப்பிட்ட சுமந்திரன், அந்த வர்த்தகர்கள் யாரும் கட்சிககு பணம் கொடுத்ததாக பகிரங்கமாக கூறித்திரியவில்லையென்பதை சுட்டிக்காட்டினார். பாஸ்கரன் தான் பணம் கொடுத்ததாக ஊடகங்களில் கூறித்திரிவதுடன், கட்சிக்கு எதிராகவும் பேசி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கந்தையா பாஸ்கரன் தமிழ் அரசு கட்சியில் இணைவதற்கான விண்ணப்ப படிவத்தை ஏற்கெனவே சமர்ப்பித்துள்ளார். அவரும், அகிலன் முத்துக்குமாரசாமியும் இரட்டை குடியுரிமையுடையவர்கள் என்றும், அவர்களை கட்சியில் இணைக்கக்கூடாதென்றும் கடந்த மாதம் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்திலும் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார்.
நேற்று முன்தினமும் இதனை வலியுறுத்தினார். அடுத்த மத்தியகுழு கூட்டங்களில் இதை ஆராய்ந்து இறுதி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.