தனது நாயை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற பல்கலைக்கழக மாணவியொருவர், லொறி மோதி உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நான்காம் வருடத்தை பூர்த்தி செய்த ரம்புக்கன கலௌததெனிய பொலத்தபிட்டியவில் வசிக்கும் சனுரி இசுரிகா வீரசேகர என்ற 26 வயதுடைய பல்கலைக்கழக மாணவியே உயிரிழந்துள்ளார். வரும் ஒக்ரோபரில் பட்டமளிப்பு விழவில், பட்டத்தை பெற காத்திருந்த போது விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன் சனுரி குருநாகலில் இருந்து 20,000 ரூபாய்க்கு நாய்க்குட்டியொன்றை வாங்கியிருந்தார். அந்த நாய்க்குட்டிக்கு ஓஜோ என்று பெயர் சூட்டப்பட்டது. கடந்த 4ம் திகதி முற்றத்தில் நாய் விளையாடிக் கொண்டிருந்த போது அதன் பின் கால் மரத்தில் மோதி நடக்க முடியாமல் தவித்தது. அதே நாளில், சனுரி நாயை முச்சக்கர வண்டியில் கேகாலை தனியார் கால்நடை வைத்தியரிடம் கொண்டு சென்றார். வைத்தியர் பரிசோதித்துவிட்டு, நாய்க்கு பாரதூரமாக காயமிருப்பதால் பேராதனையில் உள்ள கால்நடை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார்.
அதன் பின்னர், 7ஆம் திகதி காலை முச்சக்கர வண்டியில் நாயை பேராதனை அரசினர் கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். அவருடன் தங்கையும், அயல் வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவரும் சென்றுள்ளனர்.
அவர்கள் நாய்க்கு சிகிச்சை முடிந்து திரும்பும் போது, கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களகம பிரதேசத்தில் மாவனல்லை நோக்கி அதிவேகமாக சென்ற லொறி ஒன்று முச்சக்கரவண்டியை மோதியது. இதில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் பலத்த காயமடைந்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேகாலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்.
மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் தாயார் மோனிகா கிரிஷாந்தி மேலும் கூறும்போது-
“எனது கணவர் சம்பத் வீரசேகர. சம்பத் தற்போது ருமேனியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். எங்களுக்கு திருமணமாகி 27 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
7ஆம் திகதி மதியம் இரண்டு மணியளவில், என் மகளிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது மகள் சொன்னாள், அம்மா நாயின் இரண்டு கால்களையும் சரி செய்து விட்டார்கள். மருத்துவமனையில் பணம் எடுக்கவில்லை. ஆனால் கடையில் வாங்கிய பொருட்களுக்கு 8,000 ரூபாய் செலவானது. நாங்கள் வீட்டிற்குச் வருகிறோம் என்றாள்.
பிற்பகல் 3.50 மணியளவில் தபால் நிலையத்திற்கு அருகாமையில் இருந்த ஒருவர் எமது வீட்டிற்கு வந்து, முச்சக்கரவண்டி மங்களகமவில் விபத்துக்குள்ளானதாகவும், மூவரும் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர், எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள உறவினர் ஒருவருடன் கேகாலை மருத்துவமனைக்கு வந்தேன். மகள் இறந்துவிட்டதாகவும், மற்ற இருவரும் காயமடைந்ததாகவும் மருத்துவமனையின் தாதி என்னிடம் கூறினார்.
பின்னர் மாலையில் வீட்டுக்குச் சென்று மறுநாள் (08) கேகாலை பொது வைத்தியசாலைக்கு வந்தோம். மகளின் உடல் அடையாளம் காணப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
விபத்தின் பின்னர் நாயும் இறந்தது தெரிய வந்தது. ஆனால் நாயைப் பார்க்கவில்லை. இந்த விபத்து குறித்து எனது கணவரிடம் கூறினேன். அவர் இலங்கைக்கு வருவதற்காகப் புறப்பட்டுள்ளார்“ என்றார்.
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை கேகாலை பொது வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி கே.ஆர்.சுரங்க குலதுங்க அவர்களால் செய்யப்பட்டது. வழங்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் பிரகாரம், பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தலை, மார்பு உட்பட பல காயங்களினால் ஏற்பட்ட தற்செயலான மரணம் என கேகாலை பிரதேச செயலகத்தின் மரண விசாரணை அதிகாரி ரேணுகா சுபோதனி களுஆராச்சி நிஷங்க தீர்ப்பளித்தார்.
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று (10) ரம்புக்கனையில் நடைபெறவிருந்தன.
கைது செய்யப்பட்ட லொறியின் சாரதியான 58 வயதுடைய அல்கடுவ, ஹுன்னஸ்கிரிய வத்தையைச் சேர்ந்த பாக்கியநாதன் ஸ்ரனிலஸ், கேகாலை பதில் நீதவான் நிஷாந்தி அபயரத்ன முன்னிலையில் இன்று (10) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.