நடப்பு ரி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் – பி’ ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் நடப்பு சம்பியனான இங்கிலாந்து அணியை 36 ரன்களில் வென்றது அவுஸ்திரேலியா.
மேற்கு இந்தியத் தீவுகளின் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. இதில் ரொஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் துடப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது.
டேவிட் வோர்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்தனர். வோர்னர், 16 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹெட், 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். மிட்செல் மார்ஷ் மற்றும் மக்ஸ்வெல் இணைந்து 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மார்ஷ் 35 ரன்கள் மற்றும் மக்ஸ்வெல் 28 ரன்களில் வெளியேறினர். ஸ்டாய்னிஸ் 30 ரன்கள் எடுத்தார். மத்யூ வேட் 17 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் முதல் முறையாக ஒரு அணி 200+ ரன்கள் எடுப்பது இதுவே முதல்முறை.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. கப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் பில் சால்ட் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தனர்.
சாலட் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பட்லர் 42 ரன்களில் அவுட் ஆனார். இருவரையும் ஸாம்பா அவுட் செய்தார். மொயின் அலி 25, ஹாரி ப்ரூக் 20 ரன்கள் எடுத்தனர். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து இங்கிலாந்து தோல்வியை தழுவியது. அவுஸ்திரேலியா சார்பில் ஸாம்பா மற்றும் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை ஸாம்பா வென்றார்.