முல்லைத்தீவு சிலாவத்தை தியோகுநகர் மீனவர்கள் பல வருடங்களாக பயன்படுத்தி வந்த தொழிலுக்காக கடற்கரைக்கு சென்றுவரும் வீதியை அப்பகுதியில் ஹோட்டல் ஒன்றினை அமைத்துவரும் கனேடிய புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான “அவலோன்” எனும் தனியார் நிறுவனம் ஒன்று அடாத்தாக நேற்றையதினம் (26) வேலி போட்டு மூடி அடைந்துள்ளார்கள் .
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மீனவர்கள் தாம் தொழிலுக்காக கடலுக்கு சென்றுவரும் பல ஆண்டுகளாக பயன்படுத்தும் பாவனையில் உள்ள வீதியை மூடி அடைத்து அடாவடி செய்யும் இந்த அவலோன் எனும் புலம்பெயர் முதலாளியின் நிறுவனத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தில் குதித்துள்ளதோடு வீதியை மூடி அடைக்கப்பட்ட வேலியையும் மீனவர்கள் உடைத்து எறிந்துள்ளனர். இதனையடுத்து “அவலோன்” தனியார் நிறுவனத்தால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வருகைதந்த முல்லைத்தீவு பொலிஸார் மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதோடு இன்று (27) மீனவர்களில் ஐந்து பேரை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வருகைதருமாறு அழைத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்ற முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மீனவர்களோடு கலந்துரையாடி நிலைமைகளை நேரில் பார்வையிட்டார் .
இந்த “அவலோன் ” எனும் தனியார் நிறுவனம், தம்முடன் முரண்பாடுகளை ஏற்படுத்துவதோடு மீனவர்களின் தொழிலுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தி அடாவடியில் ஈடுபட்டு வருவதாக முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் உள்ள தியோகுநகர் பகுதி மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிறுவனத்துக்கு முல்லைத்தீவில் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச திணைக்களங்களின் அதிகாரிகளின் ஆதரவும் பலமாக இருப்பதாக கிராம மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.