ஒருதலை காதல் விவகாரத்தில், செவிலியரை காரில் கடத்திய இளைஞர் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார். சென்னை வேளச்சேரி எல்ஐசி காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணி செய்து வரும் 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் நேற்று முன்தினம் அதேபகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு காரில் வந்த 4 பேர் கும்பல் ஒன்றுஅப்பெண்ணை காரில் கடத்திச் சென்றது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள்இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து வேளச்சேரி காவல் நிலைய காவல் துறையினர் விசாரணையில் இறங்கினர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, 4பேர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
காரின் பதிவெண் மற்றும் அடையாளங்களை அடிப்படையாக வைத்து விழுப்புரம் அருகே சம்பந்தப்பட்ட காரை தனிப்படை காவல் துறையினர் மடக்கி நிறுத்தி பெண்ணை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் மாவட்டம் திருவா டானையைச் சேர்ந்த சபாபதி (27), அதே பகுதியைச் சேர்ந்த சபரிநாதன் (25), ராஜேஷ்(39), புதுக்கோட்டை மாவட்டம் சென்னமாரி சேத்தூர் ஹரி ஹரன் (20) ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
விசாரணையில் கடத்தப்பட்ட பெண் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், சென்னையில் தங்கி, வேளச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சபாபதி கடத்தப்பட்ட பெண்ணின் தூரத்து உறவினர். இவர் செவிலியரை ஒருதலையாக காதலித்துவந்துள்ளார்.
ஆனால், அவர் சபாபதியின் காதலை ஏற்றுக் கொள்ள வில்லை. இந்நிலையில் கடத்தி திருமணம் செய்யும் நோக்கில், செவிலியரை சபாபதி, அவரது நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி உள்ளார்.
கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் காவல் துறையினர் துப்பு துலக்கி, கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து இளம் பெண்ணை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.