யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா கலந்த மாவா விற்பனை செய்த நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லியடி முகாம் அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாலை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நேற்று (08) சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
அங்கு, துன்னாலை கிழக்கு, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர், அப்பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர். அவரிடமிருந்து 119 கிராம் 40 மில்லிகிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைக்காக அவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவர் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.