ஐபிஎல் ரி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விக்கெட் இழப்பின்றி வெறித்தன வெற்றியை பதிவு செய்தது.
166 ரன்கள் இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். கடந்த சில போட்டிகள் இருவருக்கும் சரியாக அமையாத நிலையில், இன்று மீண்டுமொரு சிறப்பான தொடக்கம் கொடுத்து, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். லக்னோ பவுலர்களை இருவரும் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் விளையாடினர். அதிலும் ருத்ரதாண்டவம் ஆடிய டிராவிஸ் ஹெட் 16 பந்தில் அரை சதம் அடித்து அசத்த, அவரை தொடர்ந்து அபிஷேக் சர்மா சில நிமிடங்களில் அரை சதம் அடித்தார்.
இதனால், 9.4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி இலக்கை எட்டியது. 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் அபிஷேக் சர்மா 75 ரன்கள், தலா 8 சிக்ஸர், பவுண்டரிகளுடன் டிராவிஸ் ஹெட் 89 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நணயச்சுழற்சியில் வென்ற லக்னோ துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குயின்டன் டி கொக் 2 ரன்களில் அவுட்டானார். அவரை விட கூடுதலாக 1 ரன்னை எடுத்து மார்கஸ் ஸ்டாயினிஸ் 3 ரன்களில் கிளம்பினார்.
கே.எல்.ராகுல் – குருனல் பாண்டியா இணைந்து நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். ஆனால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காத ராகுல் 29 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து 24 ரன்களில் பாண்டியா ரன்அவுட். 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 102 ரன்களைச் சேர்த்திருந்தது.
ஆயுஷ் பதோனி – நிக்கோலஸ் பூரன் நிலைத்து ஆடி விக்கெட் இழப்புகளை தவிர்த்து ஸ்கோரை ஏற்ற முயன்றனர். 28 பந்துகளில் பதோனி அரைசதம் கடந்தார்.
இறுதி ஓவரில் பூரன் அடித்து ஆடியதில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 165 ரன்களைச் சேர்த்துள்ளது. பதோனி 55 ரன்களிலும், பூரன் 48 ரன்களிலும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர்குமார் 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.