இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் கலால் திணைக்களத்தினால் மொத்தம் 37 புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் (FL4) வழங்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்தார்.
37ல் 16 சூப்பர் மார்க்கெட்டுக்களுக்கு வழங்கப்பட்டதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 2023 ஆம் ஆண்டு 214 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாகவும் அதில் 147 சுற்றுலாத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் தொகை விகிதத்தின்படி மேலும் 474 மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
“FL4 மதுபான அனுமதிகளின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 1,578 மதுபான அனுமதிகள் (FL4) இருக்க வேண்டும். எனவே, மேலும் 474 அனுமதிகள் வழங்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.
ஆளுந்தரப்பில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பொது மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, அனுமதி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியிடுமாறு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
மதுவரித் திணைக்களத்தினால் மதுபான அனுமதிப்பத்திரம் கோரி 1,008 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு அனுமதிப்பத்திரம் 30 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
“எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் அனுமதிகள் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அரசாங்கத்திற்கு வருமானம் கிடைப்பதை உறுதிசெய்ய அதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஜயந்த சமரவீர தெரிவித்தார்..
2022 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2023 ஆம் ஆண்டில் நாட்டில் மதுபான பாவனை 19 வீதத்தால் குறைந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.